எஸ். வேள்பாரி அவரின் தந்தை மஇகா முன்னாள் தலைவர் ச. சாமிவேலு-வுக்கு எதிராக கோலாலும்பூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தன் தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவரா, அவரால் தமது சொந்த விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள முடியுமா என்பதை நீதிமன்றம் கண்டறிய வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
”எங்களுக்கு இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. என் குடும்பத்துக்கு இது ஒரு சங்கடமான முடிவுதான்” என்று வேள்பாரி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
தன் தந்தையின் மருத்துவ நிலையைக் கண்டறிய ஒரு விசாரணை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்யுமாறு டிசம்பர் 2ஆம் நாளே வழக்குரைஞர்களிடம் கூறியதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
இரண்டு காரணங்களால் நீதிமன்றத்தில் மனு செய்ததாக வேள்பாரி கூறினார். ஒன்று மிரியம் ரோசலின் எட்வர்ட் பால் தொடுத்துள்ள வழக்கு. இன்னொன்று சாமிவேலுவுக்கு அல்சைமர் நோயால் அடிக்கடி மறதி ஏற்படுவதாக 2017-இல் மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.
82 வயதான தன் தந்தைக்குப் பழைய நண்பர்கள் பலரை இப்போது அடையாளம் தெரிவதில்லை என்றும் வேள்பாரி கூறினார்.
நடந்தவற்றை நினைவுகூரவும் அவர் சிரமப்படுகிறார் என்றாரவர்.
தன் தந்தையை நரம்பியல் மனநோய் மருத்துவர்கள் பரிசோதித்து மருத்துவ அறிக்கை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தன் நடவடிக்கைக்குத் தாயார் மற்றும் சகோதரியின் ஆசி உண்டு என்றும் அவர் சொன்னார்.
“எனக்கும் என் தந்தைக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை. எங்கள் உறவில் விரிசலுமில்லை. 2017-இலிருந்து பண விவகாரங்களையும் குடும்ப விவகாரங்களையும் கவனித்துக்கொள்ள அவர் எனக்கு அனுமதி அளித்துள்ளார்”, என்றாரவர்.
சாமிவேலு 1974-இலிருந்து 2008வரை சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 1979-இலிருந்து 2008வரை பொதுப்பணி அமைச்சராகவும் இருந்துள்ளார்.
மீரியம், சாமிவேலுக்கு எதிராக ஈப்போ உயர் நீதிமன்றத்தில் ரிம20 மில்லியன் கேட்டு வழக்கு தொடுத்திருப்பதாக தெரிகிறது.