ஜாரிங்கான் மலாயு மலேசியா தலைவர் அஸ்வாண்டின் ஹம்சா, கடந்த ஆண்டு ஒரு பேரணியில் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியைச் சிறுமைப்படுத்திப் பேசியதற்கு இன்று நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு ரிம90,000 இழப்பீடு கொடுக்கவும் ஒப்புக்கொண்டார்.
கடந்த ஆண்டு, கிறிஸ்மஸ் தினத்தன்று கிள்ளானில் நடந்த ஒரு பேரணியில் வேதமூர்த்தியைப் பலவாறு இழிவுபடுத்திப் பேசினார். பேச்சில் “ப***யா” என்ற சொல்லையும் பயன்படுத்தினார்.
அதை அடுத்து அவருக்கு எதிராக வேதமூர்த்தி கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணை இன்று நடப்பதாக இருந்தது. விசாரணைக்கு முன்னதாக இரு தரப்பினரும் சமரசம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டனர்.
சமரசத் தீர்வின் ஒரு பகுதியாக அஸ்வாண்டின் பெரித்தா ஹரியான், மக்கள் ஓசை அவருடைய முகநூல் பக்கம் ஆகியவற்றில் மன்னிப்பை வெளியிட ஒப்புக்கொண்டார். இழப்பீடு கொடுக்கவும் உடன்பட்டார். இழப்பீட்டுத் தொகையான ரிம90,000 முப்பது நாள்களுக்குள் கொடுக்கப்பட வேண்டும்.
வழக்குக்காக நீதிமன்றம் வந்திருந்தார் வேதமூர்த்தி.
“அவர் மன்னிப்பு கேட்டார். நானும் அதை ஏற்றுக்கொண்டேன். இத்துடன் விவகாரம் முடிவுக்கு வரூகிறது”, என்றாரவர்.