எம்டியுசி தொழிலாளர் சட்டத் திருத்தத்தைத் தடுக்க செனட்டர்களைச் சந்தித்தது

தொழிலாளர் சட்டச் சீரமைப்புச் சட்டவரைவு நாட்டில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குச் சமாதி கட்டிவிடும் என்று கூறிக்கொள்ளும் மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி), இன்று தேசிய செனட் மன்ற உறுப்பினர்களைச் சந்தித்து மேலவையில் அதற்கெதிராக வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டது.

தொழிலாளர் சட்டங்களில் செய்ய உத்தேசித்துள்ள திருத்தங்கள்மீது விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்த எம்டியுசி அச்சட்டவரைவு அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கு முன்னதாக தேசிய தொழிலாளர் ஆலோசனை மன்றம்(என்எல்ஏசி) உத்தேச திருத்தங்களைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

எம்டியுசி பேராளர் குழு தலைவர் அப்துல் ஹாலிம் மன்சூர், தலைமைச் செயலாளர் ஜே.சாலமன் தலைமையில் செனட்டர்களைச் சந்தித்தது. செனட்டர்களுக்கு செனட் மன்றத் தலைவர் தலைமைத் தாங்கினார்.

சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்து பேசாமலேயே
தொழிலாளர் சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டுவர முயல்கிறார்கள் என்று ஹாலிம் கூறினார்.