போலியோ அல்லது இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 75 விழுக்காட்டினருக்கு அந்நோய் இருப்பதற்கான அறிகுறியே காணப்படுவதில்லை என்கிறார் சுகாதார அமைச்சின் நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவு நிபுணர் டாக்டர் ரொஹானி ஜாஹிஸ்.
போலியாவால் பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் ஒருவருக்குத்தான் காய்ச்சல், சோர்வு, குமட்டல், வாந்தி, தலைவலி முதலியவை இருக்கும்.
“போலியோ வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 0.5 விழுக்காட்டினருக்கு முடக்குவாதம் ஏற்படலாம். அதாவது, முடக்கு வாதம் எல்லாருக்கும் வருவதில்லை”, என நேற்று பெர்னாமா டிவி-இல் ‘ருவாங் பிசாரா’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ரொஹானி கூறினார்.
சுகாதார அமைச்சு டிசம்பர் 6-இல் வெளியிட்டிருந்த ஓர் அறிக்கை, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ஒரு மூன்று-மாத குழந்தை போலியோவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததாகக் கூறிற்று.
அது ஒரு அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் மலேசியா போலியோ நோயினின்றும் மீண்ட நாடு என 27 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
உலகில் போலியோ இன்னும் முற்றாக அழிக்கப்படவில்லை எனக் கூறிய டாக்டர் ரொஹானி, நைஜீரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் முதலிய நாடுகளில் சில இடங்களில் அது இன்னும் காணப்படுகிறது என்றார்.