பாலியல் குற்றச்சாட்டுமீதான விசாரணையைத் துரிதப்படுத்தும் போலீசாருக்கு அன்வார் நன்றி

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள்மீதான விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ள போலீசாரின் செயலைப் பாராட்டினார், நன்றி தெரிவித்தார்.

“விசாரணைக்கு உதவியாக போலீசிடம் வாக்குமூலம் அளிக்கவும் தயார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

அன்வாரின் முன்னாள் ஆய்வு அதிகாரி முகம்மட் யூசுப் ராவுத்தர் அன்வார் அவருக்குப் பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்ததாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டை விசாரிப்பதில் போலீசார் முனைப்பு காட்டி வருகிறார்கள்.

குற்றவியல் சட்டம் 354வது பிரிவின்கீழ் விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக புக்கிட் அமான் சிஐடி தலைவர் ஹுசிர் முகம்மட் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

யூசுப் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களும் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்கப்பட்டார்.

மேலும் சில சட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என போலீஸ் கூறிற்று.