பிரதமர் பதவி மாற்றம் பற்றிக் கேட்பதில் நேரத்தை வீணாக்காதீர்- குவான் எங்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர் பதவியை எப்போது பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பார் என்று கேள்வி கேட்பதிலேயே நேரத்தை வீணாக்க வேண்டாம் என டிஏபி அதன் கட்சி உறுபினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பினாங்கு டிஏபி ஆண்டுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், பிரதமர் பதவி மாற்றம் குறித்து எவரும் கேள்வி எழுப்பக்கூடாது என்றார். அது அனேகமாக அடுத்த ஆண்டில் 2020 ஏபெக் உச்சநிலை மாநாட்டுக்குப் பின்னர் நிகழலாம் என்றவர் சொன்னார்.

மகாதிர் அண்மையில் ராய்ட்டர்சுக்கு அளித்த ஒரு நேர்காணலில் ஏபெக் உச்சநிலை மாநாட்டுக்குப் பின்னர் பிரதமர் பதவி அன்வாரிடம் ஒப்பட்டைக்கப்படலாம் என்று கூறியிருந்தார். ஏபெக் மாநாடு அடுத்த ஆண்டு நவம்பரில் நடைபெறுகிறது.

கட்சி உறுப்பினர்கள் உள்பிரச்னைகளைப் பொதுவில் விவாதிக்கக் கூடாது என்றும் லிம் எச்சரித்தார்.

“உள்பூசல்களை உள்ளுக்குள்ளேயே விவாதிப்பதுதான் நல்லது. கூட்டணியில் உள்ள ஒரு கட்சிக்கு ஒன்றென்றால் அது மற்ற பங்காளிகளையும் பாதிக்கவே செய்யும்”, என்றாரவர்.