‘சோஸ்மா சட்டத்தை அகற்றுக!’, ஜொகூர் மாநில அரசு சாரா இயக்கங்கள் கோரிக்கை

சோஸ்மா சட்டத்தை முழுமையாக அகற்றி, அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12 பேர் உட்பட, அனைத்து சோஸ்மா கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென ஜொகூரைச் சார்ந்த 19 அரசு சாரா அமைப்புகள் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் ஏற்பாட்டில், நடந்தேறிய மெழுகுவர்த்தி ஏந்தல் அமைதி ஒன்றுகூடலில், அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்களோடு, ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ் இராமகிருஷ்ணன் மற்றும் பி.எஸ்.எம். கட்சியின் தேசியத் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் ஆகியோரும் கலந்துகொண்டு, சோஸ்மா கைதிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

“சோஸ்மா சட்டத்தை அகற்ற வெண்டுமென இந்த அமைப்புகள் மட்டும் அழைப்பு விடுக்கவில்லை, மாறாக அது ஒரு கொடுங்கோல் சட்டம், அதனை முற்றாக ஒழிக்க வேண்டுமென சுஹாகாம், சுவாராம் மற்றும் வழக்குரைஞர் மன்றம் உட்பட பல மனித உரிமை சாற்புடைய அமைப்புகள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன,” என அருட்செல்வன் தெரிவித்தார்.

“விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று அண்மையில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கும் முறையான நீதிமன்ற விசாரணை வேண்டும்,” என இராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியின் போது, 19 இயக்கங்கள் ஆதரவு தெரிவித்த மகஜர் ஒன்றை வழங்கிய பெக்கோ சட்டமன்ற உறுப்பினருமான எஸ் இராமகிருஷ்ணன், “போலிசாரின் அறிக்கைபடி, அந்த 12 பேரும் புலிகள் தொடர்பான பொருட்கள் (படங்கள், ஸ்டிக்கர்ஸ்) வைத்திருந்தனர், டி-சட்டைகள் அணிந்திருந்தனர், மாவீரர் நாளில் கலந்துகொண்டனர் எனக் கூறப்படுகிறது. ஆனால், அதனால் நாட்டின் பாதுகாப்பிற்கு என்ன அச்சுறுத்தல் எனத் தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம்,” என்றார்.

“புலிகள் இயக்கம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே கலைக்கப்பட்டுவிட்டது. மேலும், அவர்களால் நம் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத பட்சத்தில், இந்த 12 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது எதனால்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 14), ஸ்கூடாய், ஜொகூர்பாரு (வடக்கு) போலிஸ் தலைமையகத்தின் முன் நடைபெற்ற முழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்ச்சியின் போது கையளிக்கப்பட்ட மகஜரை, உதவி போலீஸ் கமிஷனர் முகமட் தைப் அஹ்மாட் சார்பில், சிறப்பு கிளை (Special Branch) அதிகாரி முகமட் ஜாகி சிடெக் பெற்றுக்கொண்டார்.

மகஜரின் நகல், மலேசியத் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட், அட்டர்னி ஜெனரல் டோமி தோமஸ், உள்துறை அமைச்சர் முகைதீன் யாசின், காவல்துறைத் தலைவர் அப்துல் ஹமீத் பாடோர் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகம்) செயலாளர் ச்சியா ஸ்வீ நியோ ஆகிய ஐந்து பேருக்கும் வழங்கப்படும் என்றும் இராமகிருஷ்ணன் கூறினார்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழு சார்பில் பேசிய சாந்தலட்சுமி பெருமாள், “14-வது பொதுத் தேர்தலின் போது, புத்ராஜெயாவைக் கைப்பற்றினால், சோஸ்மா சட்டத்தை அகற்றுவோம் எனப் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் வாக்குறுதி கொடுத்தது, அவர்களின் தேர்தல் அறிக்கையிலும் அது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கொடுத்த வாக்குறுதியைப் புதிய அரசாங்கம் நிறைவேற்றும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

“ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. இன்னும் அந்தச் சட்டத்தை அகற்றாமல், மேலும் அதிகமானோரை அதன்கீழ் கைது செய்வது, மக்களுக்கு அவர்கள் இழைக்கும் துரோகம் ஆகும். எனவே, அவர்களை விடுதலை செய்து, முறையான நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்,” என அவர் கேட்டுக்கொண்டார்.

“நாட்டின் பாதுகாப்பிற்காக ஏற்கனவே பல சட்டங்கள் நம் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்றன. ஆக, இந்த சோஸ்மா தேவையற்றது. சோஸ்மா சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுவதை நாங்கள் விரும்பவில்லை, அதனை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை,” என ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான சாந்தா மேலும் சொன்னார்.

இந்நிகழ்ச்சியில், மலேசியத் தமிழ்நெறிக் கழக ஜொகூர் மாநிலக் கிளைகள், ஹிண்ராப்ட், மாசாய் தமிழர் சங்கம், ஜொகூர் இந்திய வணிகர் சங்கம், சிகரம், கேலாங் பாத்தா நாடாளுமன்ற கூட்டணி, அகோரா (Agora Society), மலேசியத் தமிழர் குரல் (ஜொகூர்), ஜொகூர் யெல்லோ ஃப்லேம் (Johor Yellow Flame) உட்பட 19 அமைப்புகள் கலந்துகொண்டன.