நஜிப்தான் அல்டான்துன்யாவைக் கொல்லச் சொன்னார்:மரண தண்டனை கைதி அசிலா பரபரப்பு வாக்குமூலம்

கொலைக் குற்றத்துக்காக காஜாங் சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அசிலா ஹத்ரி பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரின் நெருங்கிய நண்பர் அப்துல் ரசாக் பாகிண்டாவும்தான் அல்டான்துன்யாவைக் கொல்லச் சொன்னார்களாம்.

இதன் மூலம் அசிலா, மங்கோலிய பெண்ணான அல்டான்துன்யா ஷரிபுவைக் கொன்றது தானும் சிருல் உமரும்தான் என்பதை முதன்முறையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். “சுட்டுக் கொல்” என்று உத்தரவு வந்தது. அதன்படி நடந்து கொண்டதாக போலீஸ் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு(யுடிகே) உறுப்பினரான அசிலா கூறினார்.

அசிலா 2015-இல் தனக்கும் அதே யுடிகே-யைச் சேர்ந்தவரான சிருலுக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டு கூட்டரசு நீதிமன்றத்துக்குச் செய்துள்ள ஒரு விண்ணப்பத்தில் கொலையின் முழு விவரத்தையும் விவரித்துள்ளார்..

“நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” அதற்காக அல்டான்துன்யா கொலை வழக்கு மறுவிசாரணை செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.