இன்று புத்ரா ஜெயாவ்ல் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டைச் சந்தித்த செய்தியாளர்கள் மரண தண்டனைக் கைதியான அசிலா ஹத்ரியைச் சந்தித்த விவிஐபி அவர்தானா என்று வினவினர். அதற்கு மகாதிர் இலேசாக புன்னகைத்து இல்லை என்பதுபோல் தலை அசைத்தார்.
அந்தக் கேள்வியை அடுத்து பிரதமர் செய்தியாளர் கூட்டத்திலிருந்து அகன்றார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வழக்குரைஞரான ஷாபி அப்துல்லா, பிப்ரவரி மாதம் ஒரு மிக முக்கிய பிரமுகர் காஜாங் சிறையில் அசிலாவைச் சந்தித்ததாகக் கூறியிருந்தார்.
மேலும் மூவர் அசிலாவைச் சந்தித்து மங்கோலியப் பெண்ணான அல்டான்துன்யா ஷரிபு கொலையில் முன்னாள் பிரதமருக்குத் தொடர்புண்டு என்று அறிக்கை விடுமாறு வற்புறுத்தியதும் தனக்குத் தெரியும் என்றாரவர்.
அவர்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை ஆனால், அவர்களில் ஒருவர் ஒரு செய்தியாளர் என்பதை மட்டும் சொன்னார்.