முன்னாள் பி.கே.ஆர். புலனாய்வாளர் முஹம்மது யூசோஃப் ராவ்தர், புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்தில், நான்கு மணி நேர ‘பாலிகிராஃப்’ அல்லது ‘பொய் கண்டறிதல்’ பரிசோதனையை முடித்தார்.
பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட பாலியல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க போலீசாருக்கு உதவுவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது.
முஹம்மது யூசோஃப் தனது வழக்கறிஞரான முஹமட் ஹனிஃப் காத்ரி அப்துல்லாவுடன் புக்கிட் அமான் வந்தார். மாலை 4.30 மணிக்குத் தொடங்கிய சோதனை இரவு 8.30 மணியளவில் முடிந்தது.
பாலிகிராஃப் சோதனையில் அவரும் அவரது வாடிக்கையாளரும் திருப்தி அடைந்துள்ளதாகவும், இது போலிஸ் விசாரணைக்கு உதவும் என்று நம்புவதாகவும் முகமது ஹனிஃப் கூறினார்.
அடுத்த பாலிகிராஃப் சோதனை இருக்குமா என்று கேட்டதற்கு, இப்போதைக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திய ஹனிஃப், ஆனால் தனது வாடிக்கையாளர் எப்போதும் போலீசாருடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
டிசம்பர் 9-ம் தேதி, முகமது யூசோஃப் புக்கிட் அமான் குற்றவியல் பிரிவில் (டி 5) எட்டு மணி நேரம் விளக்கம் அளித்தார். மீண்டும் மறுநாள் புக்கிட் அமான் வந்த அவர், செந்தூல் மாவட்ட போலிஸ் தலமையகத்தில் தான் செய்த புகார் தொடர்பில், 3 மணி நேரம் விளக்கம் கொடுத்தார்.
அன்வார் கடந்த வியாழக்கிழமை புக்கிட் அமானுக்குச் சென்று விளக்கம் அளித்தார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 354 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 பிரிவு 223-ன் கீழ் விசாரிக்கப்படுகிறது.