1எம்டிபி-இலிருந்து கையூட்டுப் பெறவில்லை என்றும் நஜிப் சத்தியம் செய்வாரா?- கிட் சியாங்

அல்டான்துன்யா கொலையில் தனக்குத் தொடர்பில்லை என்று சத்தியம் செய்யத் தயாராகவுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 1எம்டிபி -இலிருந்தும் கையூட்டுப் பெற்றதில்லை என்று சத்தியம் செய்யத் தயாரா என்று சவால் விடுக்கப்பட்டுள்ளது.

சவால் விடுத்தவர் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்.

“நஜிப், 1எம்டிபிக்காக கோல்ட்மன் தலைமை செயல் அதிகாரி டிம் லெய்ஸ்ஸனர் கடன் பத்திரங்கள் வழி திரட்டிக் கொடுத்த பணத்தில் அவருக்கும் கையூட்டு வழங்கப்பட்டதாக அமெரிக்க செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் ஆணையம் (எஸ்இசி) குற்றஞ்சாட்டியிருப்பதை மறுத்து சத்தியம் செய்யத் தயாரா?”, என்று கிட் சியாங் ஓர் அறிக்கையில் வினவினார்.

லெய்ஸ்ஸனரிடமிருந்து கையூட்டு பெற்றவர்களில் நஜிப்பும் ஒருவர் என எஸ்இசி குறிப்பிட்டுள்ளது.

2012-இல், கடன் பத்திரங்கள் வழியாக 1எம்டிபி யுஎஸ்$6.5 பில்லியன் திரட்டுவதற்கு உதவிய லெய்ஸ்ஸனர் அதிலிருந்து யுஎஸ்2.7 பில்லியனைச் சுருட்டிக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அடுத்து அவர் வாழ்நாள் முழுக்க செக்கியூரிட்டீஸ் தொழிலில் ஈடுபட எஸ்இசி தடை விதித்தது.