கிளந்தானிலும் திரெங்கானுவிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது

நேற்றிலிருந்து கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் தற்காலிக துயர்த் துடைப்பு மையங்களில்(பிபிஎஸ்) வெள்ள அகதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று காலை கிளந்தானில் 1,205 குடும்பங்களைச் சேர்ந்த 4,065 பேர் துயர்த் துடைப்பு மையங்களில் தங்கி இருந்தனர். நேற்றிரவு 3,575 பேர்.

வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் ஜெலி. அங்கு 1,969 பேர் 12 பிபிஎஸ்-ஸுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தானா மேராவில் 1,211 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் 22 பிபிஎஸ்-களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

திரெங்கானுவில் நேற்றிரவு 88 ஆக இருந்த வெள்ள அகதிகளின் எண்ணிக்கை இன்று 129 அக உயர்ந்தது.

செத்யு, கம்போங் லங்காப்பில் சுங்கை நெருஸ், கோலா ஜெங்காயில் சுங்கை டுங்குன், ஹுலு திரெங்கானுவில் சுங்கை தெலிமோங் ஆகியவற்றில் நீர்மட்டம் அபாய எல்லையைத் தாண்டி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பகாங்கில், ரொம்பின், தெமர்லோ, பெரா மாவட்டங்களில் 1,071 பேர் துயர்த் துடைப்பு மையங்களில் தங்கி உள்ளனர்.

ஜோகூரில் 716 குடும்பங்களைச் சேர்ந்த 2,669 பேர் இன்று காலை 8 மணிக்கு 43 பிபிஎஸ்-களில் இருந்தனர்.