மலாய்க்காரர்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அம்னோ தலைவர்கள் தலைமை தாங்க வேண்டும் என பல அம்னோ பேராளர்கள் விடுத்துள்ள வேண்டுகோளை மலாய் பொருளாதார கூட்டமைப்பு ஒன்று இன்று நிராகரித்துள்ளது.
“அத்தகைய நடைமுறை அவசியம் இல்லை,” என மலாய் பொருளாதார ஆலோசனை மன்றத் தலைவர் ரோஸாலி இஸ்மாயில் கூறினார். மலாய் சமூகத்தின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட பல மலாய் அரசு சாரா அமைப்புக்கள் அந்த மன்றத்தில் இடம் பெற்றுள்ளன.
“நாம் நடப்பு ஜிஎல்சி தலைவர்களை நீக்கி விட்டு அவர்களுக்குப் பதில் அரசியலில் தீவிரமாக உள்ளவர்களை நியமித்தால் அவர்களுக்கு அந்த நிறுவனங்களை நிர்வாகம் செய்வதற்கு நேரம் இருக்காது. அவர்களுடைய பாதி நேரம் அரசியலிலும் பாதி நேரம் நிறுவனத்திலும் இருக்கும். அது நல்லதல்ல என நான் நினைக்கிறேன்..”
‘நிறுவனங்களை நிர்வகிக்க 100 விழுக்காடு ஈடுபாடு அவசியம். ஒரு நிறுவனத்தை நடத்துவதற்கு அறிவாற்றலும் அனுபவமும் அவசியமாகும்.” அம்னோ பேராளர்கள் தெரிவித்த யோசனை குறித்து கருத்துக் கேட்ட போது ரோஸாலி அவ்வாறு கூறினார்.
“நடப்பு ஜிஎல்சி தலைவர்களிடம் தகுதி, அனுபவம், அறிவாற்றல் ஆகிய அடிப்படையில் எந்தப் பலவீனமும் இல்லை என்றும் நான் கருதுகிறேன்.”
புத்ரா உலக வாணிக மையத்தில் நிகழும் அம்னோ ஆண்டு பொதுக் கூட்டத்தில் மலாய் பொருளாதார ஆலோசனை மன்றம் நடத்திய நிகழ்வில் ரோஸாலி பேசினார்.
ஆனால் மலாய்க்காரர்களுக்கு உதவ ஜிஎல்சி-க்கள் கடமைப்பட்டுள்ளன
கூட்டரசு அரசாங்கத்துடன் தொடர்புடைய சபாஷ் என்னும் தண்ணீர் விநியோக நிறுவனத்துக்கு நிர்வாகத் தலைவராக ரோஸாலி இப்போது பணியாற்றி வருகிறார்.
அந்த நிறுவனம் சிலாங்கூர் மாநிலத்தில் நீர் வள நிர்வாகம் மீது பக்காத்தான் ராக்யாட் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநில அரசாங்கத்துடன் சர்ச்சையில் மூழ்கியுள்ளது.
என்றாலும் பொருளாதாரத் துறையில் மலாய்க்காரர்களுக்கும் பூமிபுத்ராக்களுக்கும் உதவுவது ஜிஎல்சி-க்களின் பொறுப்புக்களில் ஒன்று என்று பேராளர்கள் கூறுவதை அவர் ஒப்புக் கொண்டார்.
ஜிஎல்சி தலைவர்களுக்கு “மலாய் உணர்வு” இருக்க வேண்டும் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார். “ஜிஎல்சி-க்கள் தேசியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் கட்டளையை நிறைவேற்றுவதுடன் இன்னும் பின் தங்கியிருக்கும் மலாய்க்காரர்களுக்கும் பூமிபுத்ராக்களுக்கும் உதவ வேண்டிய அவசியத்தை விளக்குவதற்கு அவர்களுக்கு வரலாறு மீது விழிப்புணர்வை ஏற்படுத்துவது நல்லது,” என ரோஸாலி மேலும் கூறினார்.
அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் (ஜிஎல்சி) உயர் பதவிகளுக்கு அம்னோ உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என நேற்று பல அம்னோ பேராளர்கள் அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கேட்டுக் கொண்டனர்.
நாட்டை ஆளும் மலாய்க்காரர்களுக்கும் கட்சிக்கும் உதவுவதற்குப் பயன்படுத்தப்படவில்லை என்றால் ஜிஎல்சி நிறுவனங்கள் இருப்பதால் என்ன நன்மை?” என்றும் அவர்கள் வினவினர்.