நாடு முழுவதும் ஒரே விதமான குறைந்த பட்ச சம்பளம் தேவை- பிஎஸ்எம்

அரசாங்கம் ரிம1,200 குறைந்தபட்ச சம்பளம் என்பதை 57 மாநகரங்கள், நகரங்களுக்கு மட்டும்தான் என்று நிறுத்திக் கொள்ளாமல் நாடு முழுமைக்கும் விரிவுபடுத்த வேண்டும் என பார்டி சோசலிஸ் மலேசியா வலியுறுத்துகிறது.

அக்கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அருள்செல்வன் நேற்று விடுத்த அறிக்கையில், அரசாங்கத்தின் நடவடிக்கை வருமான இடைவெளியைக் குறைப்பதற்குப் பதிலாக மேலும் விரிவடையச் செய்யும் என்று கூறினார்.

“குறைந்தபட்ச சம்பளம் ரிம1,200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிம1,200 என்பதே குறைவான தொகைதான். அதுவும் அந்த அதிகரிப்பு 57 நகரங்களுக்கு மட்டும்தான் என்று வரையறுப்பது நிலைமையை மாற்றப்போவதில்லை”, என்றாரவர்.

புதன்கிழமை அரசாங்கம் 57 நகரங்களில் குறைந்தபட்ச சம்பளம் ரிம1,200 ஆக உயர்த்தப்படுவதாகவும் நாட்டின் மற்ற பகுதிகளில் ரிம1,100 குறைந்தபட்ச சம்பளமாக தொடர்ந்து இருந்து வரும் என்றும் அறிவித்திருந்தது.