பத்து ஆராங்கில் போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள்மீதான மரண விசாரணையை அவர்களின் குடும்பத்தார் புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதற்குப் பதிலாக அதில் சம்பந்தப்பட்ட போலீசார்மீது கொலைக்குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று கோருகிறார்கள்.
மலேசியா இன்சைட்டிடம் பேசிய அவர்களின் வழக்குரைஞர் பி.உதயகுமார் குடும்பத்தார் மரண விசாரணையை நம்பத் தயாராக இல்லை என்றார்.
“போலீசாரே போலீசாரை விசாரிப்பதை நாங்கள் ஏற்கவில்லை.
“அந்தக் குடும்பத்தார் தங்கள் பிள்ளைகளைச் சுட்டுக்கொன்ற போலீசார்மீது கொலைக்குற்றம் சாட்டப்படுவதைத்தான் விரும்புகிறார்களே தவிர சுட்டுக்கொல்லப்பட்டவர்கள்மீதான மரண விசாரணையை அல்ல”, என்றாரவர்.
மரண விசாரணை டிசம்பர் 13-இல் தொடங்கவிருந்தது. ஆனால், அதற்கு உதயகுமாரும் குடும்பத்தாரும் வரவில்லை என்பதால் ஜனவரி 21-க்குத் தள்ளிவைக்கப்பட்டது.
செப்டம்பர் 14-இல் சிலாங்கூர் போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
எஸ்.மகேந்திரன்(23), ஜி.தவசெல்வன்(31), பிரிட்டனில் வசிப்பிடத் தகுதி வைத்திருந்த ஸ்ரீலங்கா குடிமகனான வி.ஜனார்த்தனன் ஆகியோரே அம்மூவருமாவர்.
ஜனார்த்தனனின் மலேசிய மனைவி ஜி.மோகனாம்பாளை- இவர் ஜி.தவசெல்வனின் சகோதரி- சம்பவம் நடந்த நாளிலிருந்து காணவில்லை.