கேஏல் சம்மிட் என்ற இஸ்லாமிய நாடுகளின் உச்சநிலை மாநாடு இன்று முடிவுக்கு வந்தது. இந்த நான்கு-நாள் மாநாடு சுமூகமாக நடந்து முடிந்தது என்றாலும் அனைத்துலக அளவில் சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
இன்று மாநாட்டை முடித்து வைத்து உரையாற்றிய பிரதமர் டாலக்டர் மகாதிர் முகம்மட் மாநாடு தொடங்கியதிலிருந்து கூறப்பட்டுவந்த குறைகூறல்களுக்குத் தமதுரையில் விளக்கமளித்தார். குறைகூறிய நாடுகளை மகாதிர் குறிப்பிடவில்லை என்றாலும் அவற்றில் சவூதி அராபியாவும் ஒன்று.
அம்மாநாடு மற்ற முஸ்லிம் அமைப்புகளுக்கு மாற்றாக ஒன்றைத் தோற்றுவிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்றும் அது முஸ்லிம் நாடுகளை வகைப்படுத்தவோ பல்வேறு வகுப்புகளாக பிரிக்கவோ முற்படவில்லை என்றும் மகாதிர் தெளிவுபடுத்தினார்.
“சிலர் நம்முடைய நோக்கங்களைத் தப்பாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். சிலர் சந்தேகக் கண்கொண்டு நோக்கினார்கள்.
“மாநாடு தொடர்பான எதிர்மறையான கருத்துகள் தவறானவை, நியாயமற்றவை என்பது இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்”, என்றாரவர்.
முஸ்லிம் நாடுகள் தங்களின் பலத்தையும் பலவீனங்களையும் மதிப்பிடவே ஒன்றுகூடின என்று மகாதிர் விளக்கினார்.
அப்போதுதான் ஒன்றின் பலத்தைக் கொண்டு மற்றொன்றின் பலவீனத்தை வெற்றிகொள்ள முடியும் என்றார்.