அழகிப் போட்டியில் நீச்சல் உடையைத் தவிர்க்க ஆலோசனை கூறியது உண்மை: செந்தூல் போலீஸ் தலைவர்

செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் சண்முகமூர்த்தி சின்னையா, அஸ்ட்ரோ சீனர்களுக்காக நடத்திய 2019 அனைத்துலக அழகிப் போட்டியில் (மாசிப்) நீச்சல் உடையில் வரும் அங்கத்தைத் தவிர்க்குமாறு போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு ஆலோசனை கூறியது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தினார்.

ஆனால், அது கட்டாய உத்தரவல்ல என்றாரவர்.

“நீச்சல் உடையில் வரும் அங்கத்தைக் கைவிட்டால் நல்லா இருக்குமே என்று ஆலோசனைதான் கூறினேன்.

“அதை ‘இரத்துச் செய்யுங்கள்’ என்று குறிப்பிடவில்லை”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

தன்னுடைய ஆலோசனை ஏற்பாட்டாளர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்று சண்முகமூர்த்தி கூறினார்.

“அவர்கள் ஆலோசனையை ஏற்று அந்த அங்கத்தை மாற்றி விட்டார்கள். இதை ஒரு பெரிய விவகாரமாக்க வேண்டாம்” என்றவர் சொன்னார்.

இதனிடையே, கெப்போங் எம்பி லிம் லிப் எங், நீச்சல் உடை அங்கத்தை நீக்கச் சொன்னது டிபிகேஎல் என்று கூறப்படுவதை மறுத்து டிபிகேஎல்லைத் தற்காத்துப் பேசினார்.

டிபிகேஎல் அழகிப் போட்டி நடத்த ஒப்புதல் கொடுத்தது என்றும் நீச்சல் உடை குறித்து எந்த நிபந்தனையும் அது போடவில்லை என்றும் டிஏபி எம்பி கூறினார்.

அந்த விசயத்தில் சண்முகமூர்த்தியின் ஆலோசனை ‘தேவையற்ற ஒன்று” என்றாரவர்.

“அந்த நிகழ்ச்சி சீன மொழியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பபட்டு வருகிறது. எந்தப் பிரச்னையும் வந்ததில்லை”, என்றார்.

அநத அழகிப் போட்டி மலேசிய அனைத்துலக வர்த்தகக் கண்காட்சி மையத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கோலாலும்பூரில் நடந்ததால் அதற்கு டிபிகேஎல் பெர்மிட் தேவைப்பட்டது.

பொதுமக்கள் ஒன்றுகூடும் இது போன்ற நிகழ்ச்சிக்குப் போலீஸ் அனுமதியும் தேவை.