ஜோ லோ-வைப் பிடிப்பதற்கு வெளிநாடுகள் ஒத்துழைப்பதில்லை

1எம்டிபி ஊழல் தொடர்பில் தேடப்படும் வர்த்தகர் ஜோ லோ-வை ஆண்டு இறுதிக்குள் பிடிப்பதாக உறுதிகூறியுள்ள இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர். அவ்விவகாரத்தில் வெளிநாட்டுப் போலீசாரின் ஒத்துழைப்பு ஏமாற்றமளிப்பதாகக் கூறினார்.

இன்று கோலால்லும்பூரில் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஐஜிபி, ஜோ லோ குறிப்பிட்ட நாட்டில்தான் இருக்கிறார் என்று மலேசிய போலீசார் தகுந்த ஆதாரங்களைக் காட்டினால்கூட அதை அந்த நாட்டுப் போலீசார் ஏற்று ஒத்துழைப்பதில்லை என்றார்.

“நேர்மையான ஒத்துழைப்பை எதிர்பார்த்தேன். அது கிடைக்கவில்லை”, என்றவர் சொன்னார்.

“தொழில்நுட்பம் முன்னேறியுள்ள இக்காலத்தில் குற்றவாளிகளால் மறைந்து வாழ முடிகிறது என்றால் அது ஆச்சரியம்தான்” என்றார்.

பின்னடைவுகள் ஏற்பட்டாலும் முயற்சியைக் கைவிடப் போவதில்லை என்றாரவர்.