கேமரன் மலை விவசாயிகளின் தோட்டங்கள் அழிக்கப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமியை மஇகா தலைமைச் செயலாளர் எம்.அசோஜன் சாடினார்.
இராமசாமி “தூண்டிவிட்டதும் அவரின் பதவிப் பேராசையும்தான்” நடப்பு நிலவரத்துக்குக் காரணம் என்றவர் சாடினார்.
மலேசியாகினியில் எழுதிய கட்டுரையில் இராமசாமி, பிஎன் கேமரன் மலை விவசாயிகளுக்குத் துரோகம் இழைத்து விட்டதாகக் குற்றம் சாட்டியிருப்பது ஒரு “அப்பட்டமான பொய்” என்றார்.
“அக்கட்டுரை, மஇகாதான் நிலத்திலிருந்து வெளியேறுமாறு கூறும் பகாங் அரசின் உத்தரவுக்கு எதிராக தற்காலிக தடை வாங்கி வைத்திருந்த விவசாயிகளிடம் ஓர் அமைதித் தீர்வுகாண உதவுவதாக உத்தரவாதம் அளித்து அவர்கள் பெற்று வைத்திருந்த தற்காலிக தடையுத்தரவை மீட்டுக்கொள்ளும்படி கூறி விவசாயிகளை ஏமாற்றி விட்டது என்பதுபோல் சித்திரிக்கிறது”, என்று அசோஜன் ஓர் அறிக்கையில் கூறினார்.
“செப்டம்பர் 30-இல் விவசாயிகள் தற்காலிக தடையுத்தரவை மீட்டுக்கொண்டதற்கும் மஇகாவுக்கும் சம்பந்தமில்லை என்பதை அடித்துக் கூறிக்கொள்கிறோம்”. என்றார்.
இராமசாமி மஇகா-வுக்கு எதிரான குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும், தவறினால் கட்சி அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரும் என்றாரவர்.
இராமசாமியின் பேராசையே விவசாயிகளின் இன்றைய நிலைக்குக் காரணம் என்றவர் சாடினார்.
“உங்களுடைய தூண்டுதலும் அதிகாரப் பேராசையுமே விவசாயிகளின் இன்றைய துயரத்துக்குக் காரணம்”, என்றார்.
ஜனவரி மாதம் கேமரன் மலை இடைத் தேர்தல் பரப்புரையின்போது பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள், குறிப்பாக டிஏபி-இல் உள்ளவர்கள், கூட்டரசு அரசாங்கம் விவசாயிகளைப் பாதுகாக்கும் என்று வாக்குறுதி அளித்தனர்.
“மஇகா மாநில அரசுக்கும் விவசாயிகளுக்குமிடையில் சமரசம் செய்து வைக்க முயன்று கொண்டிருந்த வேளையில் நீங்கள் (இராமசாமி) மாநில அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விவசாயிகளைத் தூண்டி விட்டீர்கள்”.
ஹரப்பான் அப்படி வாக்குறுதி அளித்ததை இராமசாமியால் மறுக்க முடியுமா என்றவர் வினவினார்.
மாநில அரசுக்கு எதிராக விவசாயிகளை உசுப்பிவிட்டு அவர்கள் மாநில அரசின்மீது வெறுப்புக்கொள்ள வைப்பதில் வெற்றி கண்ட பின்னர் அத்தனை ஹரப்பான் மற்றும் டிஏபி தலைவர்கள் கேமரன் மலையிலிருந்து காணாமல் போய் விட்டனர்.
“இன்றுகூட விவசாயிகள் துன்புற்றுள்ள வேளையில் அவர்களுக்குப் பக்கபலமாக நிற்பது மஇகா-தான்”, என்றவர் சொன்னார்.
“டிஏபி தலைவர்கள் அவர்கள் எதில் கெட்டிக்காரர்களோ அதை- காணொளிகள் பதிவேற்றம் செய்வதிலும் அறிக்கைகள் விடுவதிலும்- மும்முரமாக உள்ளனர்”.