கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் நிலையை எண்ணி இரத்தக் கண்ணீர் வடிக்கிறார் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா.
தலைவர்கள் ஆடும் அரசியல் சதுராட்டத்துக்குப் பலியாகி விட்டாரே அந்த பெர்சத்து எம்பி என்று அங்கலாய்க்கிறார் அனுவார்.
பார்க்கப்போனால் அவர் ஒன்றும் மோசமான அமைச்சர் அல்ல என்று கூறிய அனுவார், அவருக்குப் பதிலாக கல்வி அமைச்சராக நியமிக்கப்படுபவர் வலுவான தொடர்புகள் உள்ளவர் என்றார்.
“பாவம் மஸ்லி……அவருடைய இடத்துக்கு வரப்போகிறவர் ‘பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தில் ‘செல்வாக்குமிக்க தலைவரின் கையாள்.
“அவர் எதிலும் பட்டுக்கொள்ள மாட்டார். அரசியலில் தன்னலத்துக்கு அப்புறம்தான் மற்றவை எல்லாம் என்றிருப்பவர். முன்னாள் பிரதமரின் (நஜிப் அப்துல் ரசாக்) நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர்”, என்று அனுவார் டிவிட் செய்திருந்தார்.
“மஸ்லி கொள்கைப் பிடிப்பானவர். அவரை அடுத்து வரப்போகிறவர்……?”, என்ற கேள்வியுடன் அனுவார் நிறுத்தி இருந்தார்.
நேற்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அடுத்த கல்வி அமைச்சரை விரைவில் அறிவிக்கப்போவதாக கூறி இருந்தார்.
அப்பதவிக்குப் பலருடைய பெயர்கள் அடிபடுகின்றன. அவற்றுள் முன்னாள் அம்னோ அமைச்சர் முஸ்டபா முகம்மட்டின் பெயரும் ஒன்று. முஸ்டபா கடந்த செப்டம்பர் மாதம் பெர்சத்து உறுப்பினர் ஆனார்.