“அம்னோ விரைவில் பல்கலைக்கழக வளாகங்களில் நுழைய முடியும்”

பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15வது பிரிவு அகற்றப்படுவதற்குத் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனையால் உள்நாட்டுப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் அம்னோ நுழைவதற்கு வழி ஏற்படுத்தப்படும் என அம்னோ பொதுப் பேரவையில் பேராக் பேராளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

பாஸ் கட்சியைப் போல் அல்லாது அம்னோ சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொள்ளும் க்ட்சியாகும் என முகமட் அனுவார் அரிபின் என்ற அந்தப் பேராளர் கூறினார்.

“அந்தச் சட்டம் திருத்தப்படுவதற்கு முன்னர் பாஸ் பல்கலைக்கழகங்களுக்குள் அத்துமீறி நுழைந்து அரசியலிலும் மற்ற அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளிலும் பங்கு கொள்ளுமாறும் பொய்களையும் அவதூறுகளையும் பரப்புமாறு மாணவர்களை கேட்டுக் கொண்டிருக்கலாம்,” என அனுவார் சொன்னார்.

“என்றாலும் பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15வது பிரிவு அகற்றப்பட வேண்டும் என்ற யோசனையைத் தொடர்ந்து அம்னோ உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைய முடியும். அம்னோவில் இணைந்து பங்காற்றுமாறு மாணவர்களைக் கேட்டுக் கொள்ள முடியும். ஆகவே நாம் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”, என்றார் அவர்.

பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15வது பிரிவு ஆறு துணைப் பிரிவுகளை உள்ளடக்கியிருப்பதைச் சுட்டிக் காட்டிய அனுவார், முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு ஒரே ஒரு துணைப் பிரிவை மட்டுமே பாதித்திருப்பதாகத் தெரிவித்தார்.

பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15வது பிரிவை ரத்துச் செய்வதற்கு அரசாங்கம் யோசனை தெரிவித்திருந்த போதிலும் அந்தப் பிரிவு அரசமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளித்துள்ள முறையீட்டு நீதிமன்ற முடிவுக்கு எதிராக முறையீடு செய்து கொள்ளும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் தீவிர அரசியலில் ஈடுபடுவதைத் தடை செய்யும் பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15 (5) (ஏ) பிரிவு அரசமைப்புக்கு எதிரானது என முறையீட்டு நீதிமன்றம் அக்டோபர் 31ம் தேதி தீர்ப்பளித்தது.

நான்கு முன்னாள் மலேசிய தேசியப் பல்கலைக்கழக மாணவர்கள் செய்து கொண்ட முறையீடு மீது மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு பெரும்பான்மை அடிப்படையில் அந்தத் தீர்ப்பை வழங்கியது.

TAGS: