அமைச்சரவை உத்தரவுகளை மீறியதற்காகத்தான் மஸ்லி நீக்கப்பட்டாராம்

மலேசியா இன்சைட் செய்தி ஒன்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் அமைச்சரவை முடிவுக்கேற்ப நடந்துகொள்ளத் தவறினார் என்றும் அதனால்தான் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார் என்றும் கூறுகிறது.

டிசம்பர் 27-இல் மஸ்லிக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று காணக்கிடைத்ததாக அச்செய்தித்தளம் கூறிற்று.

அக்கடிதத்தில் ஜாவி பாடம், பள்ளிகளில் இலவச இணையச் சேவை, காலைப் பசியாறல் திட்டம் ஆகிய விவகாரங்களில் மஸ்லி அமைச்சரவையின் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்று கூறப்பட்டிருந்ததாம்.

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அனுப்பி வைத்திருந்த அக்கடிதத்தின் இறுதியில் “மாண்புமிகு(மஸ்லி) அமைச்சரவையிலிருந்து விலகும் நேரம் வந்துவிட்டது” என்று குறிப்பிடப்பட்டிருந்ததாம்.

இச்செய்தி உண்மையானதுதானா என்பதை மலேசியாகினியால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அது மஸ்லியைத் தொடர்புகொள்ள முயன்று வருகிறது.

மஸ்லி, கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.