ஏழை மாணவர்களுக்கான உணவு திட்டம் இன்று தொடங்கப்பட்டது!

கோலாலம்பூர், ஜனவரி 20 – இன்று முதல், நாடு முழுவதும் உள்ள 100 தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மேம்பட்ட துணை உணவுத் திட்டத்திற்கு (இ.எஸ்.எஃப்.பி) Enhanced Supplementary Food Programme (ESFP) தகுதியுள்ள மாணவர்கள் இலவச உணவை பெற்று பயனடைவார்கள்.

தொடக்கப் பள்ளியில் உள்ள ஏழை மாணவர்கள், ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் ஒராங் அஸ்லி பள்ளிகளில் உள்ளவர்களை குறிவைக்கிறது இத்திட்டம்.

தொடக்க கட்டத்தில், மேற்குறிப்பிடப்பட்ட இலக்கு குழுவைச் சேர்ந்த 4,000 மாணவர்களுக்கு ‘கிராப்’ என் ‘கோ’ (Grab ‘n’ Go) அதாவது “எடுத்துச் செல்லுங்கள்” என்ற அடிப்படையில் பள்ளி சிற்றுண்டிச்சாலைகளில் தயாரிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட சத்தான உணவுகள் கிடைக்கும். பாடங்கள் தொடங்குவதற்கு முன்பு இலக்கு குழு மாணவர்கள் ஆரோக்கியமான உணவை அனுபவிப்பார்கள் என்று கூறினார் கல்வி இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹபீபா அப்துல் ரஹீம் அவர்கள்.

இந்த திட்டம் 1979 முதல் நாடு முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கல்வி அமைச்சகம் (MOE) அறிமுகப்படுத்திய துணை உணவுத் திட்டத்தின் (ஆர்.எம்.டி.) (RMT) விரிவாக்கமாகும்.

காலையில் இயங்கும் பள்ளிகளுக்கு காலை 7 மணி முதல் காலை 7.30 மணி வரையிலும் பிற்பகலில் இயங்கும் பள்ளிகளுக்கு மதியம் 12.30 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் உணவு வழங்கப்படுகிறது.

“முன்னதாக, ஆர்.எம்.டி. திட்டத்தின் கீழ், இடைவேளையின் போது மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த புதிய திட்டத்தின் மூலம், மாணவர்கள் வகுப்பில் சிறப்பாக கவனம் செலுத்துவதற்கு பாடங்கள் தொடங்குவதற்கு முன்பாகவே அவர்களின் உணவை உண்ணுமாறு ஊக்குவிக்க விரும்புகிறோம், ”என்று அவர் ஒரு ஊடக மாநாட்டில் கூறினார். .

மாவட்ட கல்வி அலுவலகங்களிலிருந்து (பிபிடி) பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இம்மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஹபீபா கூறினார்.

செரி சூரியா தொடக்கப்பள்ளியை (SK Seri Suria) ஒரு எடுத்துக்காட்டுடன் மேற்கோள் காட்டி, அதன் மாணவர்களில் 90 சதவீதம் பேர் கடும் ஏழை மக்கள் வீட்டுவசதி திட்டத்தில் வாழ்கின்றனர் (People’s Housing Project for the Hardcore Poor (PPRT)) என்றார்.

“திட்டத்தின் செயல்படுத்தல் முறையானது என்பதை உறுதிப்படுத்த கல்வி இலாக்காக்களில் (PPD) இருந்து வரும் தகவல்கள் முக்கியம்,” என்றும் அவர் கூறினார்.

“நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்ற சரியான உணவைத் தேர்ந்தெடுப்பது போன்ற தகவல்களைப் பெற பெற்றோருக்கு படிவங்களை விநியோகிக்கும்” என்று ஹபீபா கூறினார்.

“நாங்கள் வெறுமனே மாணவர்களுக்கு உணவளிக்க முடியாது. முதலில் பெற்றோர்கள் தங்கள் சம்மதத்தை அளிக்க வேண்டும், மேலும் அவர்களின் குழந்தைகளுக்கு சில வகையான உணவுகளுக்கு ஒவ்வாமை இருக்கிறதா என்பதையும் நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும், ”என்று அவர் கூறினார்.

இந்த திட்டத்தை ஆசிரியர்கள் உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள் என்று அமைச்சின் உத்தரவாதத்தை ஹபீபா வழங்கினார்.

“மாணவர்களின் பெயர்களுடன் உணவு புட்டிகளில் வைக்கப்படும். எனவே, அவர்கள் நிச்சயமாக தங்கள் உணவைப் பெறுவார்கள். புட்டிகளும் கூட மறுபயனீடு செய்யக்கூடியவைகளே, அவர்கள் அதை மீண்டும் பயன்படுத்தலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

திட்டத்தின் மதிப்பிடப்பட்ட பட்ஜெட் RM22 மில்லியன் குறித்து, ஹபீபா இது முதல் கட்டத்திற்கு போதுமானது என்றும், சுகாதார அமைச்சின் பரிந்துரைப்படி மாணவர்கள் தங்கள் வயதை அடிப்படையாகக் கொண்டு சரியான அளவு கலோரிகளுடன் சத்தான உணவை அனுபவிப்பார்கள் என்றும் கூறினார்.

ஆரம்ப பள்ளிகளில் உள்ள இத்திட்டம், மாணவர்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதை உறுதி செய்வதற்கும், அவர்களின் வளர்ச்சியைத் தூண்டுவதற்காக ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவதற்கும் கலோரி மதிப்பு மற்றும் சீரான ஊட்டச்சத்து நடைமுறைகளின் அடிப்படையில் சத்தான உணவை வழங்குவதற்கான கல்வி அமைச்சின் சமீபத்திய முயற்சியாகும். – Bernama