ஒராங் அஸ்லி சமூக மேம்பாட்டில் கவனம்

குலாசேகரன்: ஒதுக்கப்பட்ட ஒராங் அஸ்லி சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர மனிதவள அமைச்சகம் உறுதியளித்துள்ளது. மனித வள அமைச்சகம் மாற்றத்தை உண்டாக்குவதற்கும், ஒராங் அஸ்லி சமூகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது.

அதன் அமைச்சர் எம்.குலசேகரன், மலேசியாவில் உள்ள பெரும்பான்மையான மக்களைப் போலவே பழங்குடியினருக்கும் கல்வி, தொழில்பயிற்சிகல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை அமைத்துக் கொடுப்பதை உறுதி செய்வதாக கூறினார்.

“நம் நாட்டில் 200,000 பேர் கொண்ட ஒராங் அஸ்லி சமூகம், எல்லா வகையிலும் மிகவும் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட சமூகம் என்பதை மறுக்க முடியாது” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாட்டின் விரைவான வளர்ச்சியின் காரணமாக, அவர்கள் வசிக்கும் பகுதிகள் பறிக்கப்பட்டுள்ளன, அதனால் அவர்கள் அடிக்கடி இடத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்”.

இந்த பொறுப்பை நிறைவேற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக குலசேகரன் கூறினார், எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி, பகாங்கில் உள்ள கேமரன் மலையைச் சுற்றியுள்ள ஒராங் அஸ்லி சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஒராங் அஸ்லி சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றி விவாதித்தார்.

ஒராங் அஸ்லி சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த, அடையாளம் காணப்பட்ட பல திறன் படிப்புகளை மனித வளத் துறை பயிற்சி நிறுவனத்தில் (ஐ.எல்.ஜே.டி.எம்)/Department of Human Resources Skills Training Institute (ILJTM) வழங்கும் என்றார். அதில் மலேசிய திறன் சான்றிதழ் (எஸ்.கே.எம் 1-3)/Malaysian Skills Certificate (SKM 1-3), டிப்ளோமாக்கள் மற்றும் குறுகியகால படிப்புகளும் அடங்கும் என்றார்.

“இந்த திட்டங்களில் அவர்களின் ஈடுபாடுகள் புதிய திறன்களை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒராங் அஸ்லி மாணவர்கள் மற்ற மாணவர்களுடனான தொடர்பு திறன்களையும் மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக் அமையும்” என்று அவர் கூறினார்.

ஜனவரி 21 முதல் 22 வரை, 78 ஒராங் அஸ்லி இளைஞர்கள் பேராக் ஈப்போவின் தொழில்துறை பயிற்சி நிறுவனத்திற்கு (ஐ.எல்.பி) அழைத்து வரப்பட்டு, பயிற்சி மையத்தில் வழங்கப்படும் திறன் படிப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக குலசேகரன் தெரிவித்தார்.

மார்ச் 28 அன்று கேமரன் மலையில் உள்ள கம்போங் சுங்கை ருயிலில் நடைபெறும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதாக அவர் கூறினார். தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (டி.வி.இ.டி) திட்டத்தின் வளர்ச்சியை கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இது 11 ஒராங் அஸ்லி இளைஞர்களால் Pembangunan Sumber Manusia Berhad (PSMB) ஊழியர்களின் உதவியுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது.

அதோடு கேமரன் மலையில் உள்ள கம்பங் ரிங்கினில் நடைபெறவுள்ள ஒரு திட்டத்தில் இணைந்து, மட்பாண்ட திறன் அறிமுகம், அடிப்படை மின் பட்டறை, குழாய் நிறுவுதல் மற்றும் அறிமுகம் செயின்சா பயன்பாடு, ஆகியவற்றை தன் அமைச்சு நடத்தும் என்றும் அவர் கூறினார். பெர்னாமா