RM1.1 மில்லியன் மதிப்புள்ள வனவிலங்கு உறுப்புகள் பறிமுதல்

சரவாக், மிரி நகரில் நேற்று ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் RM1.1 மில்லியன் மதிப்புள்ள வனவிலங்கு உறுப்புகள் மற்றும் அகர் கட்டைகள்/agarwood ஆகியவற்றை பறிமுதல் செய்து, ஒரு நபரையும் போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.

மிரி பொது செயல்பாட்டு படையின் 12 வது பட்டாலியனால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக புக்கிட் அமன் உள் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குனர் அக்ரில் சானி அப்துல்லா சானி (புகைப்படம்) தெரிவித்தார்.

வனவிலங்கு உறுப்புகள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதற்கு முன்பாக இந்த வீட்டில் தற்காலிகமாக வைத்திருக்கப்பட்டதாக நம்பப்படுகிறது என்றார்.

சோதனையின் போது, பல்வேறு தரங்கள் மற்றும் அளவுகள் கொண்ட அகர் கட்டைகள், கொம்புகளுடனான ஐந்து மான் தலைகள், 19 மான் கொம்பு துண்டுகள், இரண்டு பாதுகாக்கப்பட்ட மானிட்டர் பல்லிகள் மற்றும் இரண்டு ஆமைகள் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்தனர்.

“பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து உறுப்புகளும் மேல் நடவடிக்கைகளுக்காக சரவாக் வனவியல் துறையின் மிரி கிளைக்கு (Miri branch of the Sarawak Forestry Corporation) ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கு சரவாக் வனவிலங்கு பாதுகாப்பு கட்டளைச் சட்டம் 1998 இன் 29 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். – பெர்னாமா