இங் யென் யென்: தோல்வி கண்ட “கார் பார்க்” திட்டத்துக்கு லிம் பொறுப்பேற்க வேண்டும்

பினாங்கு கொடி மலையின் அடிவாரத்தில் 5 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட பல அடுக்கு கார் நிறுத்துமிடத் திட்டம் தோல்வி கண்டதற்கு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பொறுப்பேற்க வேண்டும் என சுற்றுலா அமைச்சர் டாக்டர் இங் யென் யென் கூறுகிறார்.

தமது ஏமாற்றத்தைத் தெரிவித்த இங், சுற்றுலா அமைச்சின் வழியாக கூட்டரசு அரசாங்க நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அந்தத் திட்டத்தை நிர்வாகம் செய்யும் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவரான லிம், சரியான பதில்களைக் கொடுக்க வேண்டும் எனக் கோரினார்.

“அவர்களால் கார் நிறுத்துமிடத்தைக் கூடக் கட்ட முடியவில்லை. அவர்கள் வேறு எதனைத்தான் செய்ய முடியும்?” என ஜோகூர் ஜெயாவில் நேற்றிரவு ஒரே மலேசியா உணவுப் பொருள் விழாவைத் தொடக்கி வைத்த பின்னர் கூறினார்.

லிம் பதில் அளிக்க வேண்டும். அந்த விவகாரத்தில் ஒரிருவர் மட்டும் பதவி விலகுவது போதுமானது அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாநில விசாரணை வாரியம் பரிந்துரை செய்திருப்பது போல பல அடுக்குகளைக் கொண்ட அந்த கார் பார்க் இடிக்கப்பட்டு, மறு வரை படம் தயாரிக்கப்பட்டும் மீண்டும் கட்டப்படும் என கடந்த சனிக்கிழமை லிம் அறிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் அந்தத் திட்டம் முடிவடைந்தது. அதன் மோசமான வடிவமைப்பு காரணமாக அதற்கு தகுதிச் சான்றிதழ் வழங்க பினாங்கு நகராட்சி மன்றம் மறுத்து விட்டது.

அந்த கார் நிறுத்துமிடத்தின் மோசமான வரைபடத்துக்கு அந்தத் திட்டத்தின் கட்டிடக் கலைஞரும் ஆலோசகரும் காரணம் என கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி மூவர் கொண்ட விசாரணை வாரியம் முடிவு செய்தது.

புதிய கட்டிடத்தைக் கட்டுவதற்கு 15 மாதங்கள் பிடிக்கும் என்றும் அதற்கு 5.5 மில்லியன் ரிங்கிட் முதல் 6.75 மில்லியன் ரிங்கிட் வரை செலவாகும் என்றும் லிம் சொன்னார்.

நடப்பில் உள்ள 112 கார் நிறுத்துமிடங்களுடன் ஒப்பிடுகையில் புதிய கார் பார்க்கில் 300 இடங்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாநில அரசாங்கத்திடமிருந்து அந்த விவகாரம் மீது தமக்கு எத்தகைய அதிகாரத்துவத் தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறிய இங், அந்தத் திட்டம் தோல்வி கண்டதால் பொது நிதி விரயமாகி இருப்பதாகச் சொன்னார்.

பெர்னாமா

TAGS: