அணுசக்தி துறையை நிர்வகிக்கும் நிபுணத்துவம் நாட்டிற்கு இல்லை

அணுசக்தி துறையை நிர்வகிக்க நிபுணத்துவம் நாட்டிற்கு இல்லை என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

கதிரியக்கக் கழிவுகளை அகற்றுவதற்கான பாதுகாப்பான வழிக் கண்டறியப்படும் வரையில், மலேசியா, அணு உற்பத்தி உலையை அமைக்காது என்று, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறுகின்றார்.

அத்துறையில், மலேசியாவிற்குப் போதுமான அனுபவம் இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
அணு உற்பத்தியினால் மிஞ்சும் கழிவுகள் லட்சக் கணக்கான ஆண்டுகள் நீடிக்கும்.

நாட்டில், இதுபோன்ற கழிவுகள், கண்ட இடங்களில் நிரம்பி வழிந்து, மக்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க, அணு உற்பத்தி உலையை நாட்டில் கட்ட முடியாது என்று, துன் டாக்டர் மகாதீர் மகாதீர்த் திட்டவட்டமாகக் கூறினர்.

2025-ஆம் ஆண்டில், மலேசியா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 20 விழுக்காடு அதிகரிக்க விருப்பதாக எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பருவ நிலை மாற்றத்துறை அமைச்சர், இயோ பி இன் உறுதியளித்திருப்பதைத் தொடர்ந்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தொடர்பாக மலேசியாவின் இலக்குக் குறித்து டாக்டர் மகாதீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

தூய்மைக்கேடை ஏற்படுத்தாத, புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பொருட்களின் அவசியத்தைப் பிரதமர் வலியுறுத்தினார்.

காற்றுத் தூய்மைக்கேடின் அளவைக் குறைக்க எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி போன்ற பாரம்பரிய எரிசக்திகளின் பயன்பாட்டைக் குறைக்க மலேசியா முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர்க் குறிப்பிட்டார்.
— பெர்னாமா