அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள்

அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் நாட்டில் அரசியல் நிலை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக பாஸ் கட்சி தெரிவுத்துள்ளதை அடுத்து இவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

“சமீபத்தில், மலேசியாவில் ஏராளமான அரசியல் நாடகங்கள் நடந்துள்ளன. நாடு பல முக்கியமான சவால்களை எதிர்கொள்கிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம்”.

“நம்பிக்கை வாக்கெடுப்பு தேவைப்படுவது மலேசியாவுக்கு தான். மலேசியா எதிர்கொள்ளும் நம்பிக்கையின் நெருக்கடியைத் தீர்க்கத் தவறினால், தொடர்ந்து மலேசியா ஒரு சாதாரண நாடாகவே இருக்கும்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முகமட், இன்று தனது அறிக்கையில், பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்த மலேசியாவுக்கு ஒரு தீவிரமான திட்டம் தேவை என்றார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“பல்வேறு துறைகளில் பொருளாதார வளர்ச்சி குறையும், குறிப்பாக சுற்றுலா மற்றும் சேவை துறையில் பொருளாதார வளர்ச்சி குறையும்,” என்று முகமட் கூறினார்.

காஷ்மீர் குறித்த மகாதீரின் நிலைப்பாடு காரணமாக இந்தியாவுடனான மலேசியாவின் உறவையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் மலேசியாவுக்கு உதவ விருப்பம் தெரிவித்த பாகிஸ்தான் ஒரு பெரிய மாற்று சக்தி அல்ல என்றும் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகள் குறைந்து வருவதால் எண்ணெய் விலை வீழ்ச்சியடைவதும், எண்ணெயை நம்பியுள்ள மலேசியாவின் வருவாய் பாதிக்கப்படும் என்று முகமட் கூறினார்.

“மலேசியாவின் அரசியல் நிலைத்தன்மை குறித்து நம்பிக்கையில்லை என்பதால் முதலீட்டாளர்களும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்”.

“இன்றுவரை, Shared Prosperity policy / பகிரப்பட்ட செழிப்பு கொள்கையை செயல்படுத்துவதையும், பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு திட்டத்தையும் காணவில்லை”.

“மலேசியா இரண்டு பெரிய நெருக்கடிகளை எதிர்கொள்கிறது – முதலாவதாக, உருதியான பொருளாதாரத் திட்டம் இன்மை – இரண்டாவதாக, பொருளாதாரத்தைத் தூண்டுவதில் உண்மையிலேயே திறமையான ஒரு பொருளாதாரக் குழு இல்லாமை” என்று அவர் மேலும் கூறினார்.

எனவே, இந்த உடனடி சவால்களில் கவனம் செலுத்த மலேசியர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

“அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள். மலேசியாவுக்கு பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் தேவை, அந்த பொருப்பு நம்மில் சிலருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் உள்ளது.” என்றார்.