கோரோனா கிருமி: சொகுசு பயணக்கப்பல் பயணிகளின் நிலை

கோரோனா கிருமி பாதிப்பு தகவல்கள்

கார்னிவல் கார்ப் நிறுவனத்திற்கு சொந்தமான Diamond Princess என்ற சொகுசு கப்பல் யோகோகாமா துறைமுகத்தில் வைக்கப்பட்டு, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரையோரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கப்பலில் இருந்து யாரும் இறக்கவில்லை.

கப்பலில் இருந்து தங்கள் குடிமக்களை நாட்டிற்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை அறிவித்த நாடுகள், நோய் அறிகுறி இல்லாதவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களை அழைத்துச் செல்வதாகவும், நாடு வந்தடைந்ததும் அவர்களைத் தனிமைப்படுத்துவதாகவும் கூறுகின்றன.

கப்பலில் இருந்து, அமெரிக்க பயணி மத்தேயு ஸ்மித் ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில், அமெரிக்க நாட்டினரை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக கரையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள் காட்டப்படுகின்றன. பிரத்யேக உடைகள் மற்றும் முகக்கவசங்களை அணிந்த அமெரிக்க அதிகாரிகள் அவரை கப்பலில் இருந்து அழைத்துச் செல்லலாமா என்று சோதிக்க அவரது அறைக்குச் சென்றிருந்தனர். அவர் கப்பலில் தங்க விரும்புவதாக கூறியுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை, தன் பயணிகளுடன் இரண்டு விமானங்களை நாட்டிற்குள் பெற தயாராகி வருகிறது – ஒன்று கலிபோர்னியாவின் டிராவிஸ் விமானப்படை தளத்திலும், (Travis Air Force Base, California) மற்றொன்று டெக்சாஸில் உள்ள கெல்லி பீல்ட் / லாக்லேண்ட் விமானப்படை தளத்திலும் (Kelly Field/Lackland Air Force Base, Texas.) தரையிறங்க தயார் நிலையில் உள்ளன.

வெளியேற்றப்பட்டவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அமெரிக்கர்கள் பயணக்கப்பலில் இருந்து இறங்குகிறார்கள்;

ஜப்பானில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் அமெரிக்க பயணிகள் கப்பலில் இருந்து வீட்டிற்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிப்ரவரி 3 முதல் 3,700 பயணிகள் மற்றும் பணியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள Diamond Princess கப்பலில் ஒரு அறிவிப்பு செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை சார்ட்டர் விமானங்களில் நாட்டிற்கு திரும்ப தயாராகுங்கள் என்று அமெரிக்கர்களிடம் அறிவிக்கப்பட்டது. முகக்கவசம் அணிந்த பயணிகள் பின்னர் கப்பலின் அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் ஜன்னல்கள் வழியாக கை அசைத்ததைக் காண முடிந்தது.

கப்பல் பயணத்தில் ஏறத்தாழ 400 அமெரிக்கர்களில், 40க்கும் மேற்பட்டவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக ஜப்பானில் தங்கியிருப்பார்கள் என்று அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் US National Institute on Allergy and Infectious Diseases (NIAID) இயக்குனர் டாக்டர் அந்தோனி தெரிவித்தார்.

“அவர்கள் எங்கும் செல்லப் போவதில்லை. அவர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனைகளில் இருக்கப் போகிறார்கள்,” என்று அவர் செய்தியிடம் கூறினார். “அறிகுறிகள் உள்ளவர்கள், நாடு செல்லும் விமானத்தில் செல்ல முடியாது. மற்றவர்கள் அமெரிக்காவில் உள்ள விமானப்படை தளங்களுக்கு உடனடியாக வெளியேற்றப்பட உள்ளனர். ”

அமெரிக்க பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள் மலேசிய நேரப்படி இன்று காலை 6 மணியளவில் ஹனெடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கனேடிய, இத்தாலியன, தென் கொரிய மற்றும் ஹாங்காங் பயணிகள் விரைவில் இதேபோன்று பின்தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது, அவர்களின் அரசாங்கங்களும் பயணிகளை திருப்பி பெறும் திட்டங்களை அறிவித்தன.

எழுபது புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் கப்பலில் உறுதி செய்யப்பட்டன, இது கப்பலில் இருந்த மொத்தத்தை 355ஆகக் உயர்த்தியது. இதில் 44 அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்தோனி தி வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தார்.

MS Westerdam

மற்றொரு கப்பல், ஹாலண்ட் அமெரிக்காவின் எம்.எஸ். வெஸ்டர்டாம் (Holland America’s MS Westerdam) கடந்த வியாழக்கிழமை கம்போடியாவில் வந்துசேர்ந்தது. அதில் இருந்து மலேசியா கொண்டுசெல்லப்பட்ட 83 வயதான அமெரிக்க பயணி ஒருவர் தொற்றுநோய்க்கு பாதிப்புள்ளாகியுள்ளார் என்பதை பரிசோதித்த அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

தைவான் அதன் முதல் இறப்பை ஞாயிற்றுக்கிழமை பதிவுசெய்தது. சனிக்கிழமையன்று ஐரோப்பாவில் முதல் இறப்பு நிகழ்ந்தது. பாரிஸ் மருத்துவமனையில் இறந்த 80 வயதான சீன நபர் ஆவார்.