பி.எஸ்.எம். : மக்களுக்கு இழைத்தத் துரோகம், பின்கதவு அரசியலைப் புறக்கணிக்கவும்!

புறக்கதவு வழியாக அரசாங்கத்தை மாற்ற முற்படும் ஒரு சிலரின் அரசியல் விளையாட்டைப் புறக்கணித்து, மறு தேர்தலை நடத்த வேண்டும் என மலேசிய சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது

மே 2018 பொதுத் தேர்தலில், வாக்குப் பெட்டியின் மூலம் பி.என். அரசாங்கத்தை வெளியேற்றி, ஒரு புதிய விடியலை விரும்பிய மலேசியர்கள் மீது அனுதாபம் கொள்வதாக அக்கட்சியின் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அத்தேர்தலில் தோல்வி கண்ட சிலர், பக்காத்தான் ஹராப்பானின் சில துரோகிகளுடன் இணைந்து, 20 மாதங்களுக்கு முன் பெற்ற நம்பிக்கையைக் கொள்ளையடிக்க, இன்று புறக்கதவு வழியாக நுழைந்து அரசாங்கம் அமைக்க முற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“இதற்கு பெரும் உந்துசக்தியாக அமைந்தது அதிகாரம். இந்த உயரடுக்கு அணுகுமுறையைக் கண்டிக்க வேண்டும், இன்றைய இந்த மாற்றத்திற்கு சதி செய்தவர்கள் நிராகரிக்கப்பட்டு, வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட வேண்டும்.

“அவர்கள் வாக்குப் பெட்டிகளிலிருந்தோ அல்லது தெருக்களிலிருந்தோ மாற்றத்தைத் திட்டமிடவில்லை. மாறாக, ஆடம்பர ஹோட்டல்களில் சந்தித்து, இம்மாற்றத்திற்கான சூழ்ச்சியைச் செய்துள்ளனர்,” என அருட்செல்வன் தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.எம். அவர்களைக் கண்டிப்பதாகத் தெரிவித்த அருட்செல்வன், தொடக்கத்திலிருந்தே பி.எஸ்.எம்., பி.எச். அரசாங்கத்தில் துன் மகாதீரின் நுழைவு குறித்து கேள்வி எழுப்பி வந்துள்ளதாகவும், இன்று அக்கட்சியின் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மக்கள் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மாற்றங்களைச் செய்ய விரும்பிய சில பி.எச். தலைவர்கள் இறுதியில் பல யு-டெர்ன்கள் அடித்தது குறித்தும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

“ஜனநாயக இடத்தைப் பாதுகாக்க, மக்களைத் தங்கள் அரசியல் நண்பர்களாகக் கருதி, மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என, பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பி.எச். அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.”

“ஆனால், துரதிர்ஷ்டவசமாக பி.எச்., பி.என். அரசாங்கத்தைப் போலவே, நவதாராளவாத, முதலாளித்துவக் கொள்கைகளை வரவேற்றதே தவிர, தங்கள் சொந்தத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை,” என்றும் அவர் சொன்னார்.

“அதுமட்டுமின்றி, பி.என்.-ஐ போலவே, இவர்களும் இன அரசியலைத் தொடர்ந்தனர், 1998-ல் கட்டியெழுப்பப்பட்ட சீர்திருத்த உணர்வையும் கொன்றுவிட்டனர்.

“இனி, அன்வார், கிட் சியாங் அல்லது மாட் சாபுவின் பின்னால், மக்கள் அணிதிரண்டு வர வாய்ப்பில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது,” என அருட்செல்வன் மேலும் கூறியுள்ளார்.

எனவே, மீண்டும் பொதுத் தேர்தலை நடத்தி, அதன்வழி புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும், புறக்கதவு அரசியலை பி.எஸ்.எம். நிராகரிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

“மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் உண்மை நிலையை அறிந்துவிட்டனர், இனி அவர்கள் தெளிவாகத் தேர்ந்தெடுப்பார்கள்.”

மேலும், புதிய அரசியல் கூட்டணி, கொள்கை அரசியல், ஒருமைப்பாட்டுக்கு முன்னுரிமை அளிப்பதோடு, ஊழல் மற்றும் உயரடுக்கு அரசியலை எதிர்த்துப் போராடும் ஒரு கூட்டணியாக அது அமைய வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.