முகிதீனின் சூத்திரம் பலிக்குமா?

முகிதீனின் சூத்திரம் பலிக்குமா?

ஆய்வு | அரசியல் நெருக்கடி தொடங்கியதிலிருந்து, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்று கருதப்பட்ட இரு கதாபாத்திரங்கள் – அஸ்மின் அலி மற்றும் டாக்டர் மகாதீர் முகமட்.

அஸ்மின் “ஷெரட்டன் மூவ்” என்ற சதித்திட்டத்தை திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இது மகாதீர் தலைமையில் அம்னோ மற்றும் பாஸ் உடன் ஒரு புதிய அரசாங்கத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

மறுபுறம், மகாதீர், ஹராப்பானுக்கான தனது உறுதிப்பாட்டை நிராகரித்ததாகவும், பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு பிரதமர் பதவியை கொடுப்பதாக அளித்த வாக்குறுதியை மீறியதாகவும், கடந்த மூன்று தசாப்தங்களில் மூன்றாவது முறையாக தான் விரும்பும் பிரதமர் பதவி பீடத்தில் மீண்டும் அமர்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த 24 மணிநேரங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளிம் வழி காய்களை வேறு யாரோ நகர்த்துகிறார் என்பதைக் குறிக்கிறது – அது பெர்சத்து தலைவர் முகிதீன் யாசின்.

முதலாவதாக, அஸ்மினும் அவரது ஆதரவாளர்களும் மகாதீரை பிரதமராக ஆதரிக்கவில்லை என்று கூறி, முகிதீனுக்கு வெளிப்படையான ஆதரவை வெளிப்படுத்தினர்.

இரண்டாவதாக, அனைத்து அம்னோ எம்.பி.க்களிலும் உறுப்பினராக இருக்கும் ஒரு அரசாங்கத்தின் பிரதமராக முகிதீனை நியமிக்க திட்டங்கள் நடந்து வருவதாக மகாதீர் நேற்று வெளிப்படுத்தினார்.

முன்னதாக, பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு வலுவான ஆதரவை வழங்கியிருந்தனர். எந்தவொரு கட்சியுடனும் பிணைக்கப்படாத, தான் பிரதமராக இருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவ விரும்பினார் மகாதீர்.

பாஸ் கட்சியின் துணைத் தலைவர் இப்ராஹிம் இப்ராஹிம் மான், மாமன்னரை சந்திக்கும் போது, அனைத்து அம்னோ மற்றும் பாஸ் எம்.பி.க்களும் முகிதீனை தங்கள் பிரதமராக நியமிக்க உத்தரவிடப்பட்டதாக கூறியதாக செய்திகள் வந்தன.

அம்னோ மற்றும் பாஸ் பொதுச்செயலாளர் இருவரும் அதை மறுத்தாலும், சில அம்னோ எம்.பி.க்கள் மலேசியாகினியிடம் இது உண்மை என்று கூறியுள்ளனர்.

அரசியல் நெருக்கடி வெடித்ததிலிருந்தே முகிதீன் ஊடகங்களின் கவனத்தைத் ஈர்த்து வருகிறார். இருப்பினும், அவரது தந்திரோபாய நகர்வுகள் இப்போது தெளிவாக வெளிப்படுகின்றன.

நேற்று, ஜொகூரில் பாக்காத்தான் அரசாங்கம் சரிந்தது. முகிதீன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் காரணமாக அம்னோ மற்றும் பாஸ் உடன் புதிய அரசாங்கத்தை உருவாக்க அவர்கள் முடிவு செய்தனர்.

முகிதீன் காம்பீர் சட்டமன்ற உறுப்பினர். ஆகவே, ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரை சந்தித்தபோது முகிதீன் புதிய அரசாங்கத்திற்கு வாக்களித்திருப்பார் என்பது உறுதி.

இன்று பிற்பகல், ஹஸ்னி முகமது புதிய ஜொகூர் அமைச்சராகப் பதவியேற்றார். அவர் பெர்சத்துவை சேர்ந்த டாக்டர் சஹ்ருதீன் ஜமாலுக்கு பதிலாக நியமிக்கப்பட்டார்.

முன்னதாக, அம்னோவும் பாஸ¤ம் பொதுத் தேர்தலை நடத்த மிகுந்த ஆர்வமாக இருந்தனர். ஆனால் இன்று முகிதீனை ஆதரிக்க முடிவு செய்தனர்.

72 வயதான முகிதீன் பல பிரதமர்களை வெளியேற்ற முயன்ற வரலாற்றைக் கொண்டவர்.

2008ஆம் ஆண்டில், அவர் அம்னோ துணைத் தலைவராக இருந்தார். கட்சியின் உறுப்பினர்களோடு சேர்ந்து அப்துல்லா அகமட் படாவியை பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யக் கோரினார்.

நஜிப் ரசாக்கை வெளியேற்ற சதித்திட்டம் தீட்டியதாக 2016 ஆம் ஆண்டில் முகிதீன் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டார். ஒரு வருடத்திற்கு முன்னதாக, அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது அவர் துணைப் பிரதமராக இருந்தார்.

ஆதாரங்களின்படி, மகாதீர் இன்று காலை பெர்சத்து கூட்டத்தின் எம்.பி.க்களுடனான சந்திப்பிலிருந்து வெளியேறினார் என்று தெரிகிறது. மகாதீரின் விருப்பத்திற்கு மாறாக, அவர்கள் அம்னோவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தினர் என்பது தெளிவாகத் தெரிந்தது.

முகிதீனின் சூத்திரம் இந்த முறை பலிக்குமா? அவர் எட்டாவது மலேசிய பிரதமராக நியமிக்கப்படுவாரா? மகாதீர் மற்றும் அன்வாரின் அரசியல் சரித்திரத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்து வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை பதிப்பாரா?

இருப்பினும், மகாதீரின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது என்று கருதுவதும் புத்திசாலித்தனமற்ற ஒன்றுதான். கடந்த காலங்களில் அவரை குறைத்துப் எடை போட்டவர்கள் இப்போது தாங்களே வீழ்த்துவிட்டதைக் காண்கின்றனர்.