புத்ராஜெயாவில் பிரதமராக பணியில் அமர்ந்தார் முகிதீன்

முகிதீன் புத்ராஜெயாவில் பிரதமராக பணியில் அமர்ந்தார்

மலேசியாவின் எட்டாவது பிரதமராக தனது பணியைத் தொடங்க முகிதீன் யாசின் பிரதம மந்திரி அலுவலகம் சென்றார்.

பிரதமராக தனது உத்தியோகபூர்வ செயல்பாட்டைத் தொடங்க அவர் காலை 8 மணிக்கு பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்தார் என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.

பிரதம மந்திரி அலுவலகத்தில் உள்ள 5ஆம் மாடிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் முகிதீனை அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகமட் ஜுகி அலி வரவேற்றார்.

அலுவலகத்திற்குள் நுழைவதற்கு முன்பு, முகிதீன் தனது பணி நேர அட்டையை ஸ்கேன் செய்தார். தனது அலுவலகத்திற்குள் நுழைந்த பின்னர், அவர் ஒரு வரவேற்பு புத்தகத்தில் கையெழுத்திட்டு பணியில் அமர்ந்தார்.

72 வயதான முகிதீன் நேற்று அரண்மனையில் பேரரசர் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா முன் எட்டாவது பிரதமராக பதவியேற்றார்.

மத்திய அரசியலமைப்பின் பிரிவு 40 (2) (a) மற்றும் பிரிவு 43 (2) (a) ஆகியவற்றின் படி முகிதீனின் நியமனத்தை சுல்தான் அப்துல்லா வழங்கினார்.

தனது முதல் நாளில், முகிதீன், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகமட் ஜுகி, தலைமை போலிஸ் அதிகாரி இன்ஸ்பெக்டர் கெனரல் அப்துல் ஹமீட் படோர் மற்றும் ஆயுதப்படைகளின் தலைமை ஜெனரல் அஃபெண்டி புவாங் ஆகியோருடன் சந்திப்பு நடத்தினார்.