ராஜினாமா செய்ததற்காக கூட்டணிகளிடம் மன்னிப்பு கேட்டார் டாக்டர் மகாதீர்

டாக்டர் மகாதீர் ராஜினாமா செய்ததற்காக கூட்டணிகளிடம் மன்னிப்பு கேட்டார்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று தனது கோலாலம்பூர் அலுவலகத்தில் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டார். பிப்ரவரி 24ஆம் தேதி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்காக மகாதீர் மன்னிப்பு கேட்டார்.

அன்றைய தினம் பெர்சத்து எம்.பி.க்கள் பக்காத்தான் ஹராப்பானில் இருந்து விலகியதால் தான் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டதாக நம்பிய பின்னர் மகாதீர் ராஜினாமா செய்திருந்தார்.

“நான் தவறு செய்துவிட்டேன், நான் ராஜினாமா செய்து விட்டேன். பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவை இழந்ததால் நான் ராஜினாமா செய்தேன். எனவே நான் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. எனக்கு வேறு வழியில்லை”.

“நான் ராஜினாமா செய்தால், பேரரசர் ஒரு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பார் என்று நான் நினைத்தேன்,” என்று அந்த மூத்த அரசியல்வாதி கூறினார்.

“நான் மிகவும் வருந்துகிறேன் என்று மீண்டும் ஒரு முறை சொல்ல விரும்புகிறேன்,” என்று அவர் ஒரு வீடியோவில் கூறினார்.

இதற்கிடையில், முகிதீனை நம்புவதில் தாம் ஏமாற்றமடைந்ததாகவும் சொன்னார்.

“அவர் எனக்கு விசுவாசமானவர் என்று சொன்ன உடனேயே, அவர் என்னைக் ஏமாற்றிவிட்டார். அவர் எனக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் தனக்குத்தானே விசுவாசத்தை வெளிப்படுத்திக்கொண்டார்”.

“திருடர்கள், கொள்ளையர்கள் மற்றும் கொலையாளிகளுடன் கூட அவர் ஒத்துழைக்க தயாராக இருக்கிறார். அதுதான் நம்மிடம் இருக்கும் சில மனிதர்களின் தன்மையாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

தான் ஏமாற்றப்படுவதை விரைவில் உணராததற்காக மகாதீரும் மன்னிப்பு கேட்டார்.

“மன்னிக்கவும். அவர் என் 2-வது மனிதராக (No 2 man) இருந்தார். எனக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் நாம் எப்போதும் சந்தேகத்தின் பேரில் செயல்பட முடியாது. நம்மிடம் முழு ஆதாரம் இருந்தால், செயல்பட முடியும்” என்று அவர் கூறினார்.

முகிதீன் பெர்சத்து எம்.பி.க்களின் பெரும்பகுதியை மகாதீரிடத்தில் இருந்து அம்னோ, பாஸ், கபுங்கான் பார்த்தி சரவாக் (ஜி.பி.எஸ்) மற்றும் பல சிறிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் இணைத்தார்.

அடிக்கடி தங்களின் விசுவாச தன்மையை மாற்றுவதால், முகிதீன் மற்றும் மகாதீருக்கு விசுவாசமான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நிச்சயமற்றே இருக்கிறது.

பாராளுமன்றம் மீண்டும் கூடும் போதுதான் முகிதீனின் ஆதரவு தெளிவுபடும்.