புதிய ஏ.ஜி. நியமனத்துடன் ஆடிப்பின் வழக்கில் நீதி கிடைக்கும் என தந்தை நம்புகிறார்
புதிய அட்டர்னி ஜெனரலாக இட்ரஸ் ஹருனின் நியமனம், இறுதியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீபீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தின் போது நிகழ்ந்த தனது மகனின் மரணத்திற்கு நீதி வழங்கப்படும் என்று நம்புகிறார் இறந்த தீயணைப்பு வீரர் முகமட் ஆடிப் முகமட் காசிமின் தந்தை.
65 வயதான முகமட் காசிம் அப்துல் ஹமீட், குற்றவாளிகள் கைது செய்யப்படும் போதுதான், தான் மனநிம்மதி அடைவார் என்று கூறியுள்ளார். புதிய அரசாங்கம் முந்தைய நிர்வாகத்தைப் போல அல்லாமல் இருக்கும் என்று அவர் நம்புவதாகக் கூறினார்.
“கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி நீதிமன்றம் ஆடிப்பின் மரணம் ஒரு குற்றச் செயலால் ஏற்பட்டது என்று தீர்ப்பளித்த பின்னர், அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் காத்திருந்தோம், ஆனால் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.
“வழக்கு நகரவேயில்லை. சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறையினர் தங்கள் கடமைகளைச் செய்வார்கள் என்று நாங்கள் நம்பினோம்” என்றார்.
“கடந்த காலத்தைப் போல இருக்காதீர்கள். அரசாங்கம் மாறிவிட்டது. ஒரு புதிய அட்டர்னி ஜெனரல் இருக்கிறார். நீதிக்கு ஒரு புதிய பாதை வகுக்கப்படட்டும்” என்று அவர் கூறினார்.
செப்டம்பர் 27 அன்று, கொரோனர் ரோஃபியா முகமட், ஆடிப்பின் மரணம் ஒரு குற்றச் செயலின் விளைவாகும் என்றும், சம்பவத்தின் போது காவல்துறையினர் செயல்படத் தவறியதாகவும் தீர்ப்பளித்தார்.
இந்த சம்பவத்தின் போது ஆடிப்பின் மார்பு அதிர்ச்சி சுயமாகவோ அல்லது விபத்து காரணமாகவோ ஏற்படவில்லை என்று நீதிமன்றம் முடிவு செய்ததாக ரோஃபியா கூறியிருந்தார். இரண்டு அல்லது மூன்று அடையாளம் தெரியாத நபர்களால் ஆடிப் தீயணைப்புத்துறை வண்டியில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
நவம்பர் 26, 2018 அன்று யு.எஸ்.ஜே 25, சுபாங் ஜெயாவில் நடந்த கலவரத்தின் போது தீயை அணைக்கும் கடமையில் இருந்தபோது ஆடிப் பலத்த காயம் அடைந்தார். டிசம்பர் 17 அன்று National Heart Institute-ல் காலமானார்.
எந்த பெயர்களையும் குறிப்பிடாமல், முந்தைய நிர்வாகம் உண்மையை மூடிமறைப்பதாகத் முகமட் காசிம் கூறினார்.
“பெற்றோராக, நானும் என் மனைவியும் எங்கள் மகனின் வழக்குக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதை நிறுத்தவில்லை … மலேசியர்கள் அனைவரும் உண்மையை எதிர்பார்க்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
“முந்தைய நிர்வாகம் உண்மையை மறைக்க முயன்றது. இருப்பினும் மலேசியர்கள் வழக்கின் விவரங்களையும், வளர்ச்சிகளையும் பின்பற்ற முடியும்,” என்று அவர் கூறினார்.
“எங்களுக்கு உதவிய அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக இலவச சேவைகளை வழங்கிய வழக்கறிஞர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்.
“எனது குடும்ப வக்கீல்கள் செவ்வாயன்று ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய உள்ளனர் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று அவர் மேலும் கூறினார்.
ஆடிப்பின் மரணம் தொடர்பாக இரண்டு முரண்பட்ட பதிப்புகளைத் தொடர்ந்து விசாரணை (inquest) உத்தரவிடப்பட்டது.