ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அம்னோ தலைவர்களை முதலில் அகற்றி விட்டு என்னை சந்திக்க வாருங்கள் – மகாதீர்

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அம்னோ தலைவர்களை முதலில் அகற்றி விட்டு என்னை சந்திக்க வாருங்கள்.

பெர்சத்து முதலில் ‘ஊழல் நிறைந்த அம்னோ நபர்களை அகற்றினால்’ பிரதமர் முகிதீன் யாசிவுடன் சந்திப்பதை பரிசீலிப்பதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

“அவர் ஏன் என்னை பார்க்க விரும்புகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒருவேளை ஊழல் நிறைந்த அம்னோ தலைவர்களை அகற்றி விட்டு வந்தால் அவரை சந்திப்பேன்”.

“அதையும் கூட நான் முதலில் நன்கு ஆலோசிப்பேன்,” என்று அவர் மலேசிய இன்சைட்டுக்கு தெரிவித்தார்.

முன்னதாக இரு தலைவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய முகிதீன் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு ஒரு கடிதம் அனுப்பியதாக தெரிகிறது.

தலைவர்கள் பலரும் ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்ற அம்னோவுடன், முகிதீன் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதில் டாக்டர் மகாதீர் விரக்தியடைந்துள்ளார்.

ஊழல் தலைவர்களுடன் தன்னால் ஒத்துழைக்க முடியாது என்று மகாதீர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

“பில்லியன் கணக்கான பணத்தை திருடிய குற்றவாளிகளுடன் என்னால் ஒத்துழைக்க முடியாது.

“அவர்கள் முதலில் அம்னோவை விட்டு வெளியேறி பெர்சத்துவில் இணைந்தால் ஏற்றுக் கொள்ள நான் தயாராக உள்ளேன் என்று அம்னோ உறுப்பினர்களிடம் சொல்லியுள்ளேன்”.

“ஆனால் முகிதீன் யாசின், ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார், அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

பெர்சத்துவை விட்டு வெளியேறி, ஒரு சில பி.கே.ஆர் எம்.பி.க்கள், பி.என் எம்.பி.க்கள், பாஸ் மற்றும் ஜிபிஎஸ் ஆகியோருடன் புதிய ஆளுநர்களின் கூட்டணியை உருவாக்க முகிதீன் அறிவித்தார்.

முகிதீன் மார்ச் 1ம் தேதி எட்டாவது பிரதமராக பதவியேற்றார். முகிதீன் செவ்வாய்க்கிழமையன்று புதிய அமைச்சரவையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.