முகிதீனின் அமைச்சரவையில் ‘தூய்மையானவர்களுக்கு’ மட்டுமே இடம் – பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் ஆபிடின்
தூய்மையான அமைச்சரவையை அமைப்பதற்கான பிரதமர் முகிதீன் யாசினின் நோக்கத்திற்கு இணங்க, புதிய அமைச்சரவை வரிசையில் ஊழல் அல்லது பிற குற்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அடங்குவார் என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டதை பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் ஆபிடின் பகிர்ந்துகொண்டார்.
அஸ்ரி தன் பேஸ்புக் பதிவில், சனிக்கிழமை இரவு முகிதீனின் வீட்டில் இரவு உரையாடலின் போது, இந்த விஷயத்தை முகிதீனால் அறிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
“எனக்கு மகிழ்ச்சி என்னவென்றால், அவரது அமைச்சரவை எம்.ஏ.சி.சி மற்றும் பி.டி.ஆர்.எம் சோதனைகளில் விடுபட்டவர்களாக மட்டுமே இருக்கும் என்று முகிதீன் எனக்குத் தெரிவித்தார்,” என்று அஸ்ரி கூறினார்.
அதைத் தவிர, அவர்களின் கல்விச் சான்றுகளையும் சரிபார்க்க முகிதீன் கோரியதாக அஸ்ரி சுட்டிக்காட்டினார்.
“முகிதீன் தனது அமைச்சரவையில் உறுப்பினராக இருக்கும் அனைவரிடமும் அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் குறித்து எந்தவிதமான தவறான கூற்றுகளையும் கூற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது”.
“ஒவ்வொருவரும் தங்களது உண்மையான கல்வித் தகுதிகளைக் கூற வேண்டும்,” என்று அவர் கூறினார்.
பெரிகட்டன் நேஷனல் அரசாங்கம் ஒரு நேர்மையான மற்றும் திறமையான அமைச்சர்களைக் கொண்டிருக்கும் என்ற மக்களின் நம்பிக்கையையும் முகிதினுடன் பகிர்ந்து கொண்டதாக அஸ்ரி கூறினார். நாட்டின் அடிப்படைகளை குறிப்பாக இஸ்லாம் தொடர்பான விஷயங்களில் எதிர்க்கும் நபர்களாக அவர்கள் இருக்கக்கூடாது.
இதற்கு ஆதரவு கொடுக்கும் அதே ஏதாவது விஷயங்கள் தவறாக நடந்தால் அரசாங்கத்தை விமர்சிக்கவும் அவர் தயாராக இருப்பதாக அஸ்ரி மேலும் கூறினார்.
இன்று மாலை 5 மணிக்கு தனது அமைச்சரவை உறுப்பினர்களின் பெயர் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் முகிதீன் இன்று காலை பேரரசர் யாங் டி-பெர்த்துவான் அகோங்கை சந்திக்க உள்ளார்.