கோவிட்-19 – மலேசியாவில் 18 புதிய பாதிப்புகள்; மொத்தம் 117 ஆக உயர்ந்துள்ளன

சுகாதார அமைச்சு இன்று 18 புதிய கோவிட்-19 பாதிப்புகளை அறிவித்துள்ளது. இது மொத்தம் 117 பாதிப்புகளாக பதிவாகியுள்ளன.

18 புதிய பாதிப்புகளில், ஒன்று மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது, மேலும் 17 பாதிப்புகள் உள்ளூர் தொற்றுகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட பாதிப்பு, ஈரானில் இருந்து திரும்பிய ‘நோயாளி 101’ என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

அவர், தனது வணிக கூட்டாளருடன் பிப்ரவரி 20 அன்று ஈரானுக்குச் சென்று பிப்ரவரி 27 அன்று திரும்பியுள்ளார்.

அவர் மார்ச் 5 ஆம் தேதி அறிகுறிகளைக் காட்டத் தொடங்கினார். பின் மார்ச் 8 ஆம் தேதி கோவிட்-19 நோய்க்கு சாதகமாக சோதிக்கப்பட்டார்.

“அவர் நெகிரி செம்பிலனில் உள்ள துவாங்கு ஜாபர் மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்பட்ட 117 பாதிப்புகளில், 22 பாதிப்புகள் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 16 வரை பரவிய முதல் சுற்று தொற்றுநோய்களிலிருந்து வந்தவை. முதல் அலையின் போது பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

மீதமுள்ள 95 பாதிப்புகள் பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இரண்டாவது சுற்று தொற்றுநோய்களின் போது ஏற்பட்டவை.

இரண்டாவது அலைகளின் கீழ் 95 பாதிப்புகளில் ஆறு மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டவை, மீதமுள்ளவை உள்ளூர் பரிமாற்றங்கள்.

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள இரண்டு நோயாளிகள் வென்டிலேட்டரின் உதவியுடன் சுவாசிக்கும் நிலையில் உள்ளனர் எனவும், அவர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முறையான சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை ஹிஷாம் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் கோவிட்-19ஆல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பயணத்தை ஒத்திவைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற சுவாச நோய்த்தொற்று போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்கள் அதிக கூட்டம் இருக்கும் இடங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என்று ஹிஷாம் கூறினார்.