ஒரு கேதுவானன் மலாயு அமைச்சரவை
பிரதமர் முகிதீன் யாசினுக்கு இப்போது ஓர் அமைச்சரவை உள்ளது. மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கு, இது மிகவும் பிற்போக்குத்தனமான அமைச்சரவையாக பிரதிபலிக்கிறது. இதில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவே இல்லை. மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள், இந்த நாட்டின் நிர்வாகத்தில் பங்கேற்க தகுதியற்றவர்கள் என்ற கருத்தை முன்வைத்திருக்கும் ஓர் அமைச்சரவை இது. முகிதீன் தனது சதித்திட்டத்தைப் பயன்படுத்தி, மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் வாக்குகளை ரத்தாக்கியுள்ளார்; பயனற்றதாக்கியுள்ளார். இப்போது அவர் தனது அமைச்சரவையின் மூலம் அவர்களின் குரலையும் முடக்கி விட்டார்.
அவரது அமைச்சரவை முற்றிலுமான ஒரு கேதுவானன் மலாயு அமைச்சரவை ஆகும். 70 அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களில், பூமிபுத்ரா அல்லாத இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஐந்து துணை அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர். சதவீதத்தின் அடிப்படையில் இது நாம் இதுவரை பார்த்திராத மிகக் குறைந்த பிரதிநிதித்துவம் ஆகும். இதற்குமுன் இருந்த ஒவ்வொரு பிரதமரும், தங்கள் சொந்த கருத்துகள் எதுவாக இருந்த போதிலும், சீனர்களும் இந்தியர்களும் மலேசியாவில் ஒரு குறிப்பிடத்தக்க சிறுபான்மையினர் என்பதையும், அமைச்சரவையில் அவர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தின் மூலம் இதை ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய கடமையாக உணர்ந்தனர். ஆனால், முகிதீனோ நமக்கு இப்படி ஒரு அமைச்சரவையை வழங்கியுள்ளார்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய கட்டமைப்பில், மலேசியாவின் அனைத்து இனங்களுடனும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது குறித்து வலதுசாரி மலாய் அரசியல்வாதிகள் நீண்டகாலமாக அதிருப்தி அடைந்துள்ளனர். 14-ஆம் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, முதன்முறையாக, ஒரு சிறந்த அரசியல் பிரதிநிதித்துவம் தோன்றியபோது, அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் எந்தவொரு முயற்சியையும் தகர்த்து நிறுத்த அவர்கள் உறுதியாக இருந்தனர்.
மலேசியா, மலாய்க்காரர்களுக்கு மட்டும் சொந்தமானது என்றும், நாட்டின் நிர்வாகத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் உயர் பதவிகளை வகிக்க இஸ்லாம் அனுமதிக்காது என்ற வர்ணனையும் அலங்கரிக்கப்பட்டது. டி.ஏ.பி. கட்சி, அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துகிறது என்றும், பெல்டா மற்றும் தபோங் ஹாஜி போன்ற மலாய் நிறுவனங்களை வீழ்த்த நாசவேலை செய்கிறது என்றும், கிறிஸ்தவர்கள் நாட்டின் அதிகாரப்பூர்வ மதத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள் என்றும், கம்யூனிஸ்ட் மற்றும் தமிழீழ விடுதலைப்புலி இயக்கம் போன்ற மலாய் அல்லாத பயங்கரவாத குழுக்கள் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றன என்றும் கதைகள் ஜோடிக்கப்பட்டன. இவை அனைத்துமே குப்பை கதையாக இருந்த போதிலும் அதன் நோக்கத்தை சரியாகவே நிறைவேற்றியது.
நமக்கு தெளிவாகவே பிரிகிறது. வெறும் பெயரளவு பிரதிநிதித்துவத்தை தவிர, மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் இந்த நாட்டின் நிர்வாகத்தில் அரசியல் பங்கைக் கொண்டிருக்கக்கூடாது. அவர்கள் வரவேற்கப்படாதவர்கள். வந்தேரிகள். இங்கே வரலாற்றின் விபத்தால், மலாய்க்காரர்களை விட மதிப்பீட்டில் குறைந்து போய்விட்ட மலேசியர்கள்.
டிரம்ப் பாணியில் ஒரு முறை முகிதீன், தனக்கு மலாய் தான் முதன்மை என்றும், மலேசிய இரண்டாவது தான் என்றும் வர்ணித்துள்ளார். இப்போது கேதுவானன் மலாயு கூட்டத்தினர் எப்போதுமே விரும்பிய ஒன்றை தந்துள்ளார். அதுவே இந்த மலாய்க்காரர்கள் ஆதிக்கம் செலுத்தும் அமைச்சரவை.
நிச்சயமாக, வீ கா சியோங் மற்றும் சரவணன் போன்றவர்களும் பிற எம்.சி.ஏ மற்றும் எம்.ஐ.சி உறுப்பினர்களின் ஒரு சிறிய அங்கத்தினர் அமைச்சரவையின் ஒரு பகுதியாக உள்ளனர். ஆனால் இதுவெல்லாம் ஒரு போலி தோற்றத்தை உருவாக்கும் ஒரு அலங்காரம். ‘இது ஒரு பன்முக அமைச்சரவை’ என்று பொதுமக்களை நம்ப வைக்கும் ஒரு சூழ்ச்சி.
எவ்வாறாயினும், வாக்காளர்களால் பெரிதும் நிராகரிக்கப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகள் எப்படி இப்போது அவர்களுக்காக குரல் கொடுக்க முடியும்?
எம்.சி.ஏ. மற்றும் எம்.ஐ.சி. ஆகிய கட்சிகள் மீண்டும் அமைச்சரவைக்கு திரும்பியது ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. முகிதீனின் தயவால், அவர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கை மீண்டும் உருவாக்க முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவு வெறுக்கப்படுகிறார்கள் என்பதை அறியாமலேயே இருக்கிறார்கள். முகிதீனின் போலி பல்லின அரசாங்கத்துடன் இணைவதன் மூலம், அவர்கள் மீண்டும் மலேசியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர்; கூடிய விரைவில் அவர்கள் மக்களின் கோபத்தை உணருவார்கள்.
இதற்கிடையில், மிகப்பெரிய பொருளாதார மந்த நிலை, கொரோனா வைரஸ் தொற்றுநோய், வீழ்ச்சியடைந்த எண்ணெய் விலை மற்றும் அரசாங்க வருவாய், குறைந்துவரும் முதலீடுகள் மற்றும் நீண்டகால உலகளாவிய மந்தநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த அமைச்சரவையிலிருந்து அதிகமாக ஒன்றையும் எதிர்பார்க்க வேண்டாம். அதே இனவெறி மற்றும் மத தீவிரவாதத்தின் கிணறுகளுக்குள் சிக்கித் தவிக்கும் தோல்வியுற்ற பழைய கொள்கைகளைத் தான் அவர்களிடமிருந்து நாம் தொடர்ந்து பெறப்போகிறோம்.
ஒருவருக்கொருவர் அதிக சக்திவாய்ந்தவர்களாக மாறாமல் பார்த்துக்கொள்ள அவர்களின் அரசியல் ஆற்றலில் பெரும்பாலானவை செலவழிக்கப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக, அரசியல்வாதிகளின் தூய்மையற்ற கூட்டணி. இது ஒரு பொதுவான கொள்கை நெறி அல்லது தூரநோக்கு பார்வையால் சேர்ந்த கூட்டணி அல்ல. மாறாக, அரசியல் ரீதியான பயனுக்கும் வசதிக்கும் ஒன்றுபட்ட கூட்டம் தானே இது. அவர்களின் விசுவாசம் தமக்கும் தங்களின் கட்சிகளுக்கும் தான். பெரிக்காத்தான் நேஷனல் என்று அழைக்கப்படும் அர்த்தமற்ற வெற்று அமைப்புக்கு ஒரு போதும் அல்ல அவர்களின் விசுவாசம்.
துணைப்பிரதமர் பதவியை காலியாக விட்டுவிட்ட முகிதீனின் முடிவிலிருந்தே தெரியவில்லையா? அமைச்சரவையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு புதுமையான வழிமுறையாக சிலர் இதைப் பாராட்டினாலும், உண்மையில், கூட்டணியுடன் பிளவுகளை மறைப்பதற்கும், முகிதீனுடன் கூட்டு வைத்திருக்கும் பெரும் லட்சியம் கொண்ட மனிதர்களைத் தடுப்பதற்கும் இது ஒரு புத்திசாலித்தனமான வழியாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தவொரு மாற்று சிந்தனையும் இன்றி, மலாய் அரசியலின் ஒரு மதிப்பிற்குரிய மூத்த மனிதரின் (மகாதீர்) முதுகில் குத்தவும் அஞ்சாத இவர்கள், வாய்ப்பு கிடைத்தால் முகிதீனை என்ன செய்வார்கள் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?
இதில், குறிப்பாக அஸ்மின், திறம்பட செயல்படுகிறார். அவருக்கு “மூத்த மந்திரி” (மற்ற மூன்று பேருடன்) என்ற நல்ல ஒரு பதவி உள்ளது. ஆனால் இதில் உண்மையான சக்தி அவருக்கு இல்லை. மகாதீரின் பொருளாதார சக்ரவர்த்தியாக இருந்தபோதே எதையும் அவர் சாதிக்கவில்லை என்றால், அவர் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் பொருப்பு வகித்து, இன்னும் குறைவாகவே பங்காற்றுவார் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். அவர் விரைவில் ஒருநிலை அற்றவராக மாறி மீண்டும் சதித் திட்டம் தீட்டத் தொடங்குவார்.
நாம் உறுதியாக நம்பக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால், அவர்கள் தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள், ஆனால் அரசியல் போர்களின் தாயாக நடக்கவிருக்கும் அடுத்த மகா தேர்தல் குறித்தே அவர்களுக்கு சிந்தனையாக இருக்கும். கட்சிக்குள்ளான மோதல்களில் யார் இந்த மலாய் அரசாங்கத்தில் உயரத்தில் அமர்ந்திருப்பார்கள், யார் பொருளாதார நன்மைகளை அதிகமாக அறுவடை செய்வார்கள் என்பதில் ஒரு பெறும் போராக இருக்கும்.
ஆனால் மலேசியர்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. முகிதீனின் அரசாங்கம், விரைவில் கேதுவானன் மலாயு சித்தாந்தத்தைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றிய சுயரீபத்தையும் அம்பலப்படுத்தும். மதவெறி மற்றும் தீவிரவாதம் அவர்களை நெடுந்தூரம் கொண்டு செல்லாது. முன்பு, அனைத்து பழிகளையும் டி.ஏ.பி.-யின் மேல் சுமத்த எளிதாக இருந்தது; இப்போது அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. அவர்கள் ஆட்சி செய்ய முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். நாட்டை மீண்டும் நகர்த்துவதற்கான புதிய யோசனைகளைக் கொண்டு வருவதற்கான திறனைக் கொண்டிருக்க வேண்டும். அந்த அளவுக்கு அவர்களுக்குத் திறைமை இல்லை.
இதில் நல்ல விஷயம் என்னவென்றால், முகிதீனின் அரசாங்கத்தின் சில வருடங்களுக்குப் பிறகு, உண்மையான மாற்றத்திற்கான குரல் அதிவேகமாக ஓங்கும். ஒரு புதிய இளைய தலைமுறை தலைவர்கள், கடந்த காலத்தை சுமந்து வராதவர்கள், ஊழலால் அறியப்படாதவர்கள், நீதி மற்றும் நல்லாட்சி மீதான ஆர்வளர்களாக எழுந்து ஆதரவைப் பெறுவார்கள். இது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு பத்து வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் கூட ஆகலாம். ஆனால் ஒரு நாள், நம் கற்பனையில், கணவுகளில் இருக்கும் மலேசியா நிஜமாவதை நிச்சயம் காணலாம்.
[டென்னிஸ் இக்னேஷியஸ் | கோலாலம்பூர் | 10 மார்ச் 2020]