புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம்

புத்ராஜெயா, மார்ச் 11 – பெர்டானா புத்ராவில் நடைபெற்ற புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிரதமர் தான் ஸ்ரீ முகீதின் யாசின் இன்று தலைமை தாங்கினார்.

காலை 9.25 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் நேற்று பதவியேற்ற 31 அமைச்சர்களும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்குவதற்கு சற்று முன்பு முகிதினும் அமைச்சர்களும் ஒரு குழு புகைப்படத்தை பிடித்தனர்.

மார்ச் 9 அன்று, முகிதீன் தனது அமைச்சரவையை அறிவித்தார். மலேசிய நிர்வாக வரலாற்றில் முதல்முறையாக, அதில் ஒரு துணை பிரதமர் இடம்பெறவில்லை.

அதற்கு பதிலாக பிரதமர் நான்கு மூத்த அமைச்சர்களை நியமித்தார். டத்தோ ஸ்ரீ முகமது அஸ்மின் அலி சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்; பாதுகாப்பு அமைச்சராக டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப்; பணி அமைச்சராக டத்தோ ஸ்ரீ படில்லா யூசோப்; மற்றும் கல்வி அமைச்சராக டாக்டர் முகமட் ராட்ஸி ஜிடின்.

இங்குள்ள இஸ்தானா மேலாவத்தியில் நேற்று பேரரசர் யாங் டி-பெர்டுவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா முன் அமைச்சரவையின் அமைச்சர்கள் பதவியேற்றனர்.

72 வயதான முகிதீன் மார்ச் 1ம் தேதி பிரதமராக பதவியேற்றார்.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ முகமட் ஜுகி அலி மற்றும் துணை தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் ஃபரிசா அகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • பெர்னாமா