காவல்துறை தலைவர் அப்துல் ஹமீத் படோர், கடந்த இரண்டு வாரங்களாக நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை நிறைவேற்ற தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அவற்றில், இன்றிரவு முதல் மாநிலத்திற்கு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
“ஊருகளுக்கு திரும்பிச் செல்ல விரும்பும் மக்கள் தங்கள் நடமாட்டத்தை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்”.
“நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை மீறும் எந்தவொரு நபரும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம்.
“இந்த இரண்டு வாரங்களில் மீறல்கள் அதிகரித்தால், காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்” என்று கோலாலம்பூரில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
மாநிலங்களுக்கு இடையில் பயணிக்க விரும்புவோர் ஒரு சிறப்பு படிவத்தை பூர்த்தி செய்து பயணத் தேவைகள் குறித்த உறுதிப்படுத்தல் ஆவணத்தை இணைக்க வேண்டும் என்று ஹமீட் கூறினார்.
“அந்த சிறப்பு படிவத்தை அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட காவல் தலைமையகத்திலோ பூர்த்தி செய்த பின் காவல்துறையினர் அனுமதி கடிதம் வழங்க முடியும்”.
“இது முக்கியமான அல்லது அவசர விஷயங்களைக் கொண்டவர்களுக்கு மட்டுமே” என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், புத்ராஜெயாவில் நடந்த கோவிட்-19 பத்திரிகையாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா, நள்ளிரவு முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு கட்டளைக்கு இணங்கத் தவறினால், சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பதை மக்களுக்கு நினைவுபடுத்தினார்.
“முதல் குற்றத்திற்காக, உத்தரவுக்கு இணங்கத் தவறும் நபர்கள் இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்”.
“இரண்டாவது அல்லது அடுத்தடுத்த குற்றங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் ஆகும்.
“தொடர்ச்சியான குற்றங்களுக்காக, ஒவ்வொரு தொடர்ச்சியான குற்றத்திற்கும் தனிநபருக்கு RM200 அபராதம் விதிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.