பொதுமக்கள் உத்தரவுக்கு இணங்கவில்லை என்றால் இராணுவம் இறக்கப்படலாம்
கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதற்கான பொது நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவுகளை அமல்படுத்த காவல்துறையைத் தவிர, மலேசிய ஆயுதப்படை சேவையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
நேற்றைய நிலவரப்படி, மக்களின் அமலாக்க இணக்கத்தின் அளவு சுமார் 60 சதவீதமாக இருப்பதாகவும், வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதை விரும்புவதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், இப்போதைக்கு, காவல்துறையின் திறனை நம்புவதாகவும், இராணுவத்தை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.
நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவின் கீழ், அத்தியாவசியமற்ற அனைத்து வணிகங்களும் மூட உத்தரவிடப்பட்டன. அதே நேரத்தில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும், மாநிலங்களுக்கு இடையில் பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் மலேசியாவிற்குள் நுழையவும் அனுமதி இல்லை.
மக்கள் வீட்டிலேயே இருக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். உணவு வாங்குவது போன்ற ஏதாவது தேவைப்படும்போது மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
“சாலைத் தடுப்பு வழக்கம் போல் தொடரும். முதல் இரண்டு, மூன்று நாட்கள், வெறும் அறிவுரையாக மட்டும் இருக்கும். மக்கள் தொடர்ந்து உத்தரவுகளை பின்பற்ற மறுத்தால், காவல்துறையினர் மேலும் கடுமையான திட்டங்களை அமல்படுத்துவார்கள்” என்று அவர் கூறினார்.