“தயவுசெய்து எல்லையைத் திறக்கவும்” – சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் வேண்டுகோள்

மார்ச் 17 அன்று, வேலைக்காக தினமும் சிங்கப்பூருக்குச் செல்லும் மலேசியர்கள் இனி மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை அவ்வாறு செய்ய முடியாது என்பது உறுதிபடுத்தப்பட்டது.

இந்த அறிவிப்பு சுமார் ஏழு ஆண்டுகளாக சிங்கப்பூர் பராமரிப்பு துறையில் பணிபுரிந்து வரும் மலேசியர்களான 43 வயதான இஸ்மாயில் மற்றும் அவரது மனைவிக்கு கவலையை எழுப்பியது.

“இந்த அறிவிப்பால் நாங்கள் அதிர்ந்தோம். சிங்கப்பூர் செல்ல விரும்பும் மலேசிய சுற்றுப்பயணிகள் மட்டுமே மார்ச் 18 முதல் அங்கே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

“ஒரு நாளுக்கு முன்னதாக பிரதமரின் சிறப்பு செய்தி கூட சிங்கப்பூரில் பணிபுரியும் எந்த மலேசியர்களையும் பாதிக்கவில்லை. அதே நேரத்தில் சிங்கப்பூர் அரசாங்கமும் வழக்கம் போல் நாங்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளது.

“திடீரென்று பிற்பகலில் ஒரு புதிய அறிவிப்பு வந்தது. எங்களுக்கு வழங்கப்பட்ட நேரம் 12 மணிநேரம் மட்டுமே” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது இஸ்மாயில் கூறினார்.

இந்த அறிவிப்பு வெளியானபோது, அவரும் அவரது மனைவியும் ஏற்கனவே சிங்கப்பூரில் இருந்தனர் என்பது தெளிவாகிறது.

நேரம் முடிந்துவிட்டது

“நாங்கள் அதிர்ச்சியடைந்தோம், பீதியடைந்தோம். பின்னர், மார்ச் 17 நள்ளிரவுக்கு முன்னர் நாங்கள் திரும்பி வந்தால், எங்களுக்கு இடவசதியை வழங்குவதாக முதலாளி ஒரு அவசர கூட்டதில் அறிவித்தார்”.

“நாங்கள் உடனடியாக சிங்கப்பூரை விட்டு ஜோகூருக்கு திரும்பினோம். அவசரமாக தேவையான பொருள்களையெல்லாம் எடுத்துக் கொண்டு எல்லைக்கு விரைந்து வந்தோம். அங்கு ஏற்கனவே கடும் போக்குவரத்துக்கு நெரிசலாக இருந்தது”.

சிங்கப்பூர் திரும்பும் பணியில் அவர் மிகவும் துரிதமாக இருந்ததால், அவரும் அவரது மனைவியும் தங்கள் ஆறு வயது குழந்தையைக் கூட பார்க்க முடியவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருந்ததாக இஸ்மாயில் கூறினார்.

“வழக்கமாக, நான் என் குழந்தையை என் அம்மாவின் வீட்டிற்கு அனுப்புவேன். வேலை முடிந்ததும் மீண்டும் சென்று கூட்டிக் கொள்வோம். ஆனால், அன்று எங்களுக்கு ‘பை’ சொல்ல கூட நேரம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் நான் சிங்கப்பூரிலிருந்து வீடியோ அழைப்பு விடுக்கும்போது அவர் அழுவார்,” என்ற இஸ்மாயில், மலேசிய அரசாங்கத்தை எல்லையை மீண்டும் திறக்க வலியுறுத்தினார்.

“உத்தரவு நீட்டிக்கப்படுமா என்று எங்களுக்குத் தெரியாது. சிங்கப்பூரிலிருந்து திரும்பிய 14 நாட்களுக்குப் பிறகு நாங்கள் தனிமைப்படுத்தலுக்கு வேறு கட்டுப்படுவோம்”.

“தயவு செய்து எல்லையை மீண்டும் திறக்குமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்”.

“குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை உள்ளே வர எங்களுக்கு அனுமதி கொடுக்கவும். சுகாதார அதிகாரிகள் உடல் வெப்பநிலை சோதனைகள் மற்றும் பலவற்றை செய்யட்டும். அறிகுறிகள் ஏற்பட்டால் மேல் பரிசோதனைக்காக நாங்கள் தடுத்து வைக்கப்படவும் தயார்” என்று அவர் கூறினார்.

மலேசியாவில் வயதான பெற்றோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை விட்டு வெளியேற வேண்டிய நண்பர்களும் இங்கே இருக்கின்றனர், என்றார்.

மலேசியர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் சுகாதார பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இதற்கிடையில், சிங்கப்பூரில் பணிபுரியும் மற்றொரு மலேசியரான தேவி, 39, தனது முதலாளி தன்னை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்ததால் தான் மிக அதிர்ஷ்டசாலி என்று கூறினார்.

இருப்பினும், அவரது கணவர் நடமாட்ட கட்டுபாடு உத்தரவின் இறுதி வரை சிங்கப்பூரில் தங்கும்படி ஆணையிடப்பட்டுள்ளார்.

மலேசிய அரசாங்கத்தின் அறிவிப்பு தாமதமானதால், மார்ச் 17 அன்று பலர் சிங்கப்பூருக்குள் நுழைய முடியாமல் போய்விட்டது என்றும், தயாராகும் நேரம் பற்றாமல் போய்விட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

“அந்த நாளில் போக்குவரத்து நெரிசல் இயல்பை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. ஆகவே, உள்ளே வரமுடியாத பலருக்கு ஊதியம் குறைக்கப்படும் அல்லது வேலைகளை இழக்க நேரிடும் என்று நான் நம்புகிறேன்.

“எனவே, இந்த தொழிலாளர்களுக்கு சிங்கப்பூரில் தொடர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக எங்கள் அரசாங்கம் எல்லையை மீண்டும் திறக்கும் என்று நம்புகிறேன். அவர்கள் அனைவருக்கும் மற்றவர்களைப் போல மாத இறுதியில் கட்ட வேண்டிய பல கட்டணங்கள் உள்ளன”.

தேவியின் கூற்றுப்படி, கோவிட்-19 பாதிப்பில் இருந்து, சிங்கப்பூர் எல்லையில் எப்போதும் ஸ்கிரீனிங் சோதனைகள் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

“ஒவ்வொரு நாளும், நானும் எனது சகாக்களும் சிங்கப்பூரில் ஒரு ஸ்கிரீனிங் சோதனை செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுவோம். அதிக உடல் வெப்பநிலை மற்றும் பிற அறிகுறிகள் ஏற்பட்டால், அந்த நபர் மேல் சுகாதார பரிசோதனைக்கு தனிமைப்படுத்தப்படுவார். இது பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து சிங்கப்பூரில் செய்யப்பட்டு வரும் முறை”.

“இருப்பினும், மலேசியாவில் வழக்கமான ஸ்கிரீனிங் சோதனைகள் இல்லை என்று கூறலாம். சில நேரங்களில் ஸ்கிரீனிங் டெஸ்ட் கவுண்டரில் ஊழியர்கள் கூட இருக்க மாட்டார்கள்”.

“எனவே, தொற்றுநோய் பரவாமல் தடுக்க எல்லைகளை மூடாமல், ஸ்கிரீனிங் சோதனைகளை நடத்துவதன் மூலம் எங்கள் சுகாதாரத்தை அறிந்து, நடமாட்டத்தை அரசாங்கத்தால் இன்னும் கட்டுப்படுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன்”. என்றார்.