கோவிட்-19: 110 புதிய நோய்த்தொற்றுகள், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 900

110 புதிய தொற்றுநோய்களைத் தொடர்ந்து மலேசியாவின் கோவிட்-19 பாதிப்புகள் 900ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் ஆதாம் பாபா தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக ஒரே நாளில் நாடு 100க்கும் மேற்பட்ட பாதிப்புகளை பதிவு செய்திருக்கிறது.
110 புதிய பாதிப்புகளில், 63 கோலாலம்பூரில் உள்ள செரி பெட்டாலிங்கில் நடந்த ஒரு மதக் கூட்டத்தில் இருந்து தொற்றுநோய்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை நடந்துள்ளது.

“தீவிர சிகிச்சை பிரிவில் 20 கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களுக்கு சுவாச உதவி தேவைப்படுவதாகவும் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று ஆதாம் இன்று மாலை புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நேற்று 15 பேர் வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மேலும் 15 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும், வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆதாம் கூறினார்.

இது குணப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கையை 75 ஆகக் பதிகிறது.
பொது நடமாட்ட கட்டுப்பாடு ஒழுங்கிற்கு மக்கள் பின்பற்றி இணங்க வேண்டும் என்று ஆதாம் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த உத்தரவின் கீழ், மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை; வெளிநாட்டவர் நாட்டினுள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

அத்தியாவசியமற்ற அனைத்து வணிகங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளன. உணவுப் பொருட்களை நிரப்ப வேண்டிய அவசியம் போன்ற தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர மலேசியர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கூறப்படுகிறார்கள்.

மலேசியர்கள் தங்கள் வீடுகளின் எல்லைக்குள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்கவும், அவர்கள் உட்கொள்ளும் உணவு காலாவதியாகாமல் பார்த்துக் கொள்ளவும் ஆதாம் கேட்டுக்கொண்டார்.