நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை ஏப்ரல் 14 வரை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் முகிதீன் யாசின் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சிறப்பு உரையின் போது இதனை அறிவித்த அவர், கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்த்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

“தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சுகாதார அமைச்சு எனக்கு விளக்கத்தை அளித்தன. அதில், தற்போதைய வளர்ச்சியின் படி பார்க்கையில், கோவிட்-19-இன் புதிய பாதிப்புகள் இன்னும் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது”.

“புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவதற்கு முன்பு, இந்த நிலை சில காலம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசாங்கம் நடமாட்டக் கட்டுப்பாடை மேலும் நீண்ட காலத்திற்கு தொடர வேண்டிய அவசியம் உள்ளது”.

“இதனால், நடமாட்டக் கட்டுப்பாடு காலம் ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

முகிதீன், மக்களை வீட்டில் இருக்குமாறும், தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

“தயவுசெய்து அமைதியாக இருங்கள். பீதி அடைய வேண்டாம். நாங்கள் நடமாட்டக் கட்டுப்பாடு காலத்தை நீட்டித்திருந்தாலும், நீங்கள் தேவையின்றி உணவை சேமிக்க வேண்டியதில்லை. இருப்பு போதுமானதாக இருக்கிறது”.

“அனைவருக்கும் உணவு போதுமானதாக உள்ளது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.