பிரதமர், அமைச்சர்கள் கோவிட்-19 நிதிக்கு 2 மாத சம்பள பங்களிப்பு

பிரதமர், அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் கோவிட்-19 நிதிக்கு நன்கொடை அளிக்க இரண்டு மாத சம்பளத்தை குறைத்துக் கொள்கின்றனர்.

நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த நடவடிக்கை கோவிட்-19 பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேற்று, அரசு மானியங்கள் உட்பட அந்நிதியால் சேகரிக்கப்பட்ட தொகை RM8,493,103.48 என்றும் பிரதமர் அலுவலகம் அறிவித்தது.

மார்ச் 11 அன்று, பிரதமர் முகிதீன் யாசின் கோவிட்-19 நிதியை RM1 மில்லியன் ஆரம்ப நிதியுதவியுடன் தொடங்கினார். இதை தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (Nadma) நிர்வகிக்கின்றது.

14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வேலையின்மையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவவும் அந்நிதி பயன்படும் என்று முகிதீன் கூறினார்.

இந்த வெள்ளிக்கிழமை, கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக முடங்கிக் கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக ஒரு புதிய தூண்டுதல் தொகுப்பை முகிதீன் அறிவிக்க உள்ளார்.

தற்போது, பிரதமரின் சம்பளம் RM22,826.65. இரண்டு மாத சம்பளம் என்றால் RM45,653.30.

அமைசர்களின் சம்பளம் RM14,907.20, அதாவது அவர்களின் இரண்டு மாத சம்பளம் RM29,814.40.

பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் அமைச்சரவையில் நான்கு மூத்த அமைச்சர்கள் உட்பட 31 முழுநேர அமைச்சர்கள் உள்ளனர். இதனால், அவர்களின் மொத்த பங்களிப்பு RM924,246.40 ஆகும்.

துணை அமைச்சரின் சம்பளம் RM10,847.65 ஆகும், அதாவது அவர்களின் இரண்டு மாத சம்பளம் RM21,695.30 ஆகும்.

முகிதீனின் அமைச்சரவையில் 37 துணை அமைச்சர்கள் உள்ளனர்.

துணை அமைச்சர்களின் மொத்த பங்களிப்பு RM802,726.10 ஆகும்.

கோவிட்-19 நிதிக்கு முகிதீன், அமைச்சர் மற்றும் துணை அமைச்சரின் மொத்த பங்களிப்பு RM1,772,625.80 ஆகும்.