நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு: சனிக்கிழமை முதல் மேலும் கடுமையான நடைமுறைகள்

தேசிய பாதுகாப்பு கவுன்சில் (MKN) நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய கடுமையான நடைமுறை வழிகாட்டுதல்களை சனிக்கிழமையன்று வெளியிடும் என்று தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், பொருள்களை வாங்க மக்கள் வெளியே வருவது குறித்து கடுமையான விதிகளை உள்ளடக்கியுள்ளது என்றார்.

“இனி வரும் காலத்தில் பொருள் வாங்குவது, உணவு வாங்குவது போன்றவை குறித்து நிறைய கட்டுப்பாடுகள் இருக்கும்”.

“கோவிட்-19 தொற்றை தடுப்பதில் எங்கள் நடவடிக்கை வெற்றிகரமாக இருப்பதை உறுதி செய்வதற்காக இன்னும் கடுமையான முறைமையை அறிவிக்கப்படும்” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டை நீட்டிக்காமல் பார்த்துக் கொள்வது பொதுமக்களிடமே உள்ளது என்றும், அவர்கள் வீட்டில் இருப்பதன் மூலம் அவ்வாறு செய்ய முடியும் என்றும் இஸ்மாயில் கூறினார்.

மார்ச் 31 வரை நடைமுறையில் இருந்த நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டதாக நேற்று பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்தார்.

முன்னதாக, ஐந்து சதவீத மக்கள் இந்த உத்தரவுக்கு கீழ்ப்படியவில்லை என்று அவர் கூறினார்.

“சந்தைகளிலும், பல்பொருள் அங்காடிகளிலும், சிலர் மட்டுமே கூடல் இடைவெளியைக் கடைபிடிக்கின்றனர், ஆனால் பலர் கடைபிடிக்கவில்லை”.

“நகரத்தில் நிலைமை அமைதியாக இருந்தாலும், இன்னும் பல வாகனங்கள் (சாலைகளில்) உள்ளன, பலர் இன்னும் வெளியே வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

இந்த உத்தரவை மீறிய 110 பேரை நேற்று போலீசார் கைது செய்து மொத்தம் 163,487 வாகனங்களை சோதனை செய்தனர்.

இன்றுவரை, மலேசியாவில் கோவிட்-19, 1,796 பாதிப்புகளையும் 21 இறப்புகளையும் எட்டியுள்ளன.