கோவிட்-19: அரண்மனை ஊழியர்களில் ஏழு பேர் பாதிப்பு

அரண்மனை இன்று தனது ஊழியர்களில் ஏழு பேர் கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் அவரது துணைவியார் துங்கு ஹஜா அஜீசா அமினா மைமுனா ஆகியோர் கோவிட்-19 சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

“இந்த செயல்முறையின் விளைவாக, நேற்று தொடங்கி 14 நாட்களாக அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர்” என்று கோலாலம்பூரில் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக நேற்று பிரதமர் டான் ஸ்ரீ முகிதீன் யாசினை சந்திக்க நடைபெறவிருந்த வாராந்திர கூட்டத்திற்கும், அடுத்தடுத்த அமர்வுகளுக்கும் கோவிட்-19 தொற்று நிலைமை சரியாகும் வரை பேரரசர் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிப்பதாக முன்னர் அறிவித்ததற்கு பேரரசர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அனைத்து மலேசியர்களும் தொடர்ந்து உறுதியாக நின்று சுகாதார மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று அவர் அதிர்ப்பார்கிறார்”.

தேசிய அரண்மனை ஊழியர்களின் கோவிட்-19 தொற்று குறித்து, சுகாதார அமைச்சு நோய்த்தொற்றுக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறது. மேலும் ஏழு அதிகாரிகளின் அனைத்து நெருங்கிய தொடர்புகளையும், பணிபுரிபவர்களையும் கண்காணித்து வருகிறது.

“இந்த நெருங்கிய தொடர்புகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கோவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனை செயல்முறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அனைத்து நெருங்கிய தொடர்புகள் மற்றும் ஊழியர்களுக்கும் நேற்று தொடங்கி 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் பாதுகாப்பு மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி தேசிய அரண்மனை விரிவான துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் செய்யும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அகமட் பாடில் கூறினார்.