கோவிட்-19: விதிமுறை அமலாக்கத்தில் ஒருங்கிணைப்பு அவசியம்

இராகவன் கருப்பையா – கோவிட்-19 க்கு எதிரான போரில் மலேசியாவின் நடவடிக்கைகள் இன்னும் முழுமையாக ஒருங்கிணையவில்லை. இந்நோய் தொடர்ந்து பரவாமல் இருப்பதற்கான வழிமுறைகள் மட்டுமின்றி இதன் தாக்கத்தில் இருந்து கூடிய விரைவில் நாம் விடுபடுவதற்கும் அரசாங்கம் மற்றும் பொது மக்கள், ஆகிய இரு தரப்பினருமே நிறைய நிலைகளில் ஒருங்கிணைய வேண்டியிருக்கிறது.

எதிர்வரும் ஏப்ரல் 14ம் தேதி வரையில் அமலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஆக்ககரமான பலனைக் கொணருவதை உறுதி செய்ய போலீஸாரும் ராணுவத்தினரும் இரவும் பகலுமாக மிகவும் கடுமையாக போராடி வருவதை நாம் பாராட்டத்தான் வேண்டும்.

அதே சமயம் அந்த அமலாக்கத்தில் குளறுபடிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினருக்குமே அது சங்கடத்தை ஏற்படுதும்.

உதாரணத்திற்கு, முகக் கவசங்களை பொது மக்கள் அனைவரும் அணிய வேண்டிய அவசியமில்ல, கோவிட்-19 நோய்க்கான அறிகுறி உள்ளவர்களும் மருத்துவ சேவைகளில் ஈடுபட்டுள்ளோரும் மட்டுமே அணிந்தால் போதும் என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் விளக்கியிருந்தார். சுகாதார அமைச்சின் வழிகாட்டிகளுக்கு அப்பாற்பட்டு யாரும் சுயமாக விதிமுறைகளை அமல்படுத்த வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுருந்தார்.

தேவையில்லாமல் எல்லாரும் முகக்கவசங்களை அணிய வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சின் தலைமை செயலாளர் நோர் ஹிஷாம் அப்துல்லாவும் உயர் போலீஸ் அதிகாரிகளும் கூட வலியுறுத்தியுள்ளனர்.

இந்த  காலக்கட்டத்தில் வாகனமோட்டும் உரிமம் மற்றும் சாலை வரி போன்றவற்றை புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

இன்றுமுதல் எல்லா சாலைத் தடுப்புகளிலும் வாகனமோட்டிகளின் உடல் உஷ்ணம் சோதிக்கப்படும் என்றும் உஷ்ணம் அளவுக்கு அதிகமாக இருந்தால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தொடர் சோதனைகளுக்கு அனுப்பப்படுவார்கள் என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா அறிவித்துள்ளார்.

நல்ல விசயம்தான். ஆனால் போலீஸாரோ ராணுவத்தினரோ பொது மக்களிடம் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்.