கோவிட்-19: 200க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு இலவச அறைகளை வழங்குகிறது சிலாங்கூர் அரசு

தற்போது கோவிட்-19க்கு எதிராக கடுமையாக போராடும் முன்னணி பணியாளர்களுக்கு இலவச தங்குமிடமாக மொத்தம் 287 ஹோட்டல் அறைகள் சிலாங்கூர் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன.

டி பால்மா ஆம்பாங் De Palma Ampang மற்றும் டி பால்மா ஷா ஆலம் De Palma Shah Alam ஹோட்டல்களை வைத்திருக்கும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (PKNS) மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதீன் ஷாரி தெரிவித்தார்.

நாட்டில் 34 பேர் கொல்லப்பட்ட கொரோனா கிருமியை எதிர்த்து போராடுபவர்களுக்கு உதவ 2ஆம் கட்ட தூண்டுதல் தொகுப்பாக மாநில அரசு மேற்கொண்ட முயற்சி இது என்று அவர் கூறினார்.

“ஹோட்டல் டி பால்மா ஆம்பாங்கில் மொத்தம் 204 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக மேலும் 83 அறைகள் டி பால்மா ஷா ஆலத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மலேசிய ஆயுதப்படைகள் (ATM) மற்றும் மலேசிய காவல்துறை (PDRM) ஆகியவற்றுடன் சிலாங்கூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்பின் மூலம் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அமிருதின் கூறினார்.

தேவைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் இலவச விடுதி சலுகை மற்ற குழுக்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், தனியார் மருத்துவமனைகள் கோவிட்-19 அல்லாத நோயாளிகளை அரசு மருத்துவமனைகளில் இருந்து பெற ஒப்புக் கொண்டதாகவும் அமிருதின் அறிவித்தார்.

“இந்த தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்க தயாராக உள்ளன” என்று அவர் கூறினார்.

முன்னதாக, சிலாங்கூர் அரசு மருத்துவமனை முழுவதும் கோவிட்-19 நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் RM200 ஊக்கத்தொகை மற்றும் உணவு உதவியை அறிவித்திருந்தது.

கடந்த மார்ச் 18 முதல் தொடங்கி, நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலம் முழுவதும் இந்த உணவு உதவி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூடுதலாக, நடமாட்டக் கட்டுப்பாடு அமலாக்கத்தைத் தொடர்ந்து சபா மற்றும் சரவாக் நகரில் தற்போது பயின்று வரும் சுமார் 2,500 சிலாங்கூர் மாணவர்களுக்கு அந்தந்த உயர்க் கல்விக் கூடங்களில் தங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால், அவர்களுக்கு RM200 உதவிகளையும் வழங்கியுள்ளார்.