கோவிட்-19: சுகாதார அமைச்சின் அதிகாரி இறந்தார், இறப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது

இன்று மாலை சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் கோவிட்-19க்கு பலியானதைத் தொடர்ந்து மலேசியா தனது 35வது மரணத்தை பதிவு செய்தது.

சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, சமீபத்திய மரணம் 57 வயதுடைய ‘நோயாளி 1,952’ என்று கூறியுள்ளார்.

அவருக்கு இந்தோனேசியாவுக்கு சென்று வந்த ஒரு பயண வரலாறு இருந்துள்ளது.

மார்ச் 17 ஆம் தேதி புத்ராஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் அவருக்கு அறிகுறிகள் இருந்தன. பின்னர் அவர் கோலாலம்பூர் மருத்துவமனை மற்றும் சுங்கை புலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

“அவர் மார்ச் 18 அன்று கோவிட்-19க்கு சோதனை செய்தார். அவரது உடல்நலம் நாளுக்கு நாள் மோசமடைந்து மார்ச் 29 அன்று மாலை 4 மணிக்கு காலமானார்.

“சுகாதார அமைச்சு அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று அவர் இன்று இரவு ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

இதற்கிடையில், சுகாதார அமைச்சர் ஆடாம் பாபாவும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

“அவரது மரணம் சுகாதார அமைச்சகத்திற்கு ஒரு இழப்பு” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘நோயாளி 1,952’ சுகாதார அமைச்சின் மனிதவளப் பிரிவில் பணிபுரிந்ததாக ஆடாம் தெரிவித்தார்.

இதுவரை மலேசியாவில் 2,470 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.